118 வழக்குகள்.. விதி மீறி தீபாவளி பட்டாசு வெடித்தவர்கள் மீது சென்னை போலீஸ் ஆக்சன்
சென்னை: விதிகளை மீறி பட்டாசு வெடித்ததற்காக சென்னையில் மட்டும் 118 வழக்குகளை சென்னை போலீஸ் பதிவு செய்து இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று தொடங்கி வரை தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகிறார்கள். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பட்டாசுகளை வெடிக்க நேரக்கட்டுப்பாட்டை தமிழ்நாடு அரசு விதித்து இருக்கிறது. இதன் காரணமாக இதன் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுமாசு தரக்குறியீடு 100 முதல் 200 வரை பதிவாகியுள்ளது. சென்னையில் காற்றின் தரக் குறியீடு 231 ஐ தொட்டு உள்ளது. கடலூர் - 155, வேலூர் - 122, சேலம் - 122, புதுச்சேரி - 147 என்ற அளவில் காற்று மாசு தரக் குறியீடு உயர்ந்து இருக்கிறது.

காற்று மாசு அளவு அதிகரித்து உள்ளதால் ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம் எனவும், இதய நோய் பாதிப்பு கொண்டவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படலாம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்து இருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் பட்டாசு வெடிப்பதில் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் விளக்கமளித்து உள்ளார்கள். முன்னதாக தமிழ்நாடு காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில், "இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டம் மற்றும் மாநகரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பண்டிகை நாட்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களைத் தடுக்க மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் குற்ற செயல்களை கண்காணிக்க கூடுதல் கவனங்களுடன் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏதும் இல்லாமல் பொதுமக்கள் பயணம் செய்ய வாகனங்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விடுமுறை காலத்தில் அதிக அளவு அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களில் பொதுமக்கள் பெருமளவு பயணிப்பதால் பேருந்து நிலையங்கள், முக்கிய சந்திப்புகள் மற்றும் வாகன சுங்கச்சாவடிகளில் சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் பயணிக்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய பேருந்து நிலையங்களான கோயம்பேடு, மாதவரம், கே.கே. நகர், பூந்தமல்லி, பெருங்களத்தூர் மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் சிறப்பு பேருந்துகள் போக்குவரத்து நெரிசல் இன்றி செல்ல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் முக்கிய சாலை வழித்தடங்கள், குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்த வரையில் பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை, ஜி.எஸ்.டி சாலைகளில் போக்குவரத்தை சரி செய்ய சுமார் 300 காவல் ஆளிநர்களும். தாம்பரம் மற்றும் பள்ளிக்கரணை பகுதிகளில் 1100 காவலர்களும், சென்னை காவல் ஆணையரகப் பகுதிகளில் சுமார் 18,000 காவலர்களும், ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் 2,500 காவல் ஆளிநர்களும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து இரயிலில் பயணம் செய்யும் பொதுமக்களின் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும் மேலும் குற்ற செயல்களை தடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் சென்னை இருப்பு பாதை காவல் துறையில் 700 காவல் ஆளிநர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எதிர்பாராத விதமாக தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண்.101, காவல்துறை அவசர உதவி எண்.100, அவசர உதவி ஆம்புலன்ஸ்:108, தேசிய உதவி எண்.112, ஆகியவற்றை தொடர்பு கொண்டு உதவி பெறலாம். பொதுமக்கள் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும், பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு தமிழ் நாடு காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications