சென்னையில் இறந்தும் உயிர்பிழைத்த பெண்! அதுவும் பல நிமிடங்களுக்கு பின்.. போலீஸ் செய்த காரியம்! சபாஷ்
சென்னை: தலைநகர் சென்னையில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணுக்கு போலீசார் மூலம் கடைசி நிமிடத்தில் அதிசியம் நடந்துள்ளது. இது சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சமீப காலங்களில் தற்கொலை நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவே வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எந்தவொரு பிரச்சினையைச் சந்தித்தாலும் அதற்குத் தற்கொலை தீர்வு இல்லை.. தப்பித் தவறியும் தற்கொலை எண்ணம் வந்தால் உடனே நண்பர்களுடன் பேச வேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

தற்கொலை
தற்கொலையால் விலைமதிப்பற்ற உயிர் போவது மட்டுமின்றி, ஒருவரைச் சுற்றியிருக்கும் குடும்பமும் மோசமாகப் பாதிக்கப்படுகிறது. பெரும்பாலும் மன அழுத்தம், தனிமை உணர்வு, நிதானம் தவறி எடுக்கும் முடிவு உள்ளிட்ட காரணங்களே தற்கொலைக்குக் காரணமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 2021இல் மட்டும் மொத்தம் 18,925 பேர் தற்கொலையால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தற்கொலை சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது என்பதே

சென்னை
தற்கொலை சம்பவங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களைக் கொண்டு வருகிறது. இதற்கிடையே சென்னை பல்லாவரத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு அரிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சென்னை பழைய பல்லாவரம், சுபம் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன்.. 70 வயதான இவர், தனது மனைவி தமிழ்செல்வி (53) உடன் அங்கே வசித்து வருகிறார். இவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

போலீசார்
அப்படித்தான் கடந்த 15ஆம் தேதி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தமிழ்செல்வி தனது பெட் ரூம் சென்று அறையைப் பூட்டிக் கொண்டார். பின்னர், தனது புடைவை ஒன்றை எடுத்துத் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகே இருந்தவர்கள் இதைப் பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி பல்லாவரம் காவல் உதவி ஆய்வாளர் கோபால் உள்ளிட்டோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
பேச்சு மூச்சே இல்லை
அவர்கள் அங்கே வருவதற்குள் தமிழ்செல்வி தூக்கு மாட்டிக் கொண்டார். இருப்பினும், உடனடியாக கதவை உடைத்து உள்ளே நுழைந்த போலீசார், தூக்கில் இருந்த தமிழ்செல்வியை மீட்டனர். அவர் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்தார். அப்போது சமயோஜிதமாக செயல்பட்ட போலீசார், நொடியும் தாமதிக்காமல் சிபிஆர் சிகிச்சை அளித்துள்ளனர். தூக்கில் தொங்கிய தமிழ்செல்வியை மீட்டு சிபிஆர் கொடுத்துள்ளனர்.

சிபிஆர்
போலீசார் தமிழ்செல்வியின் நெஞ்சில் கை வைத்து அழுத்திக் கொண்டே இருந்தார். இப்படியே சில நிமிடங்கள் வரை கொடுத்துள்ளனர். அதன் பின்னர், திடீரென தமிழ்செல்வி மூச்சு விட்டபடி எழுந்தார். அவர் எழுந்த பிறகுதான் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இதையடுத்து சிகிச்சைக்காக தமிழ்செல்வி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். தற்போது அவர் நலமாகவே உள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

உதவி எண்கள்
மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்த பெண்ணை தக்க நேரத்தில் காப்பாற்றிய பல்லாவரம் போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர். எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050
ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.












Click it and Unblock the Notifications