Crystal Clear Roads: தென் சென்னையில் மழை பெய்த தடயமே இல்லை! போட்டோக்களை பாருங்கள்!
சென்னை: சென்னையில் நேற்று இரவு எதிர்பாராத அளவுக்கு மழை கொட்டிய போதிலும் இன்று காலை பெரும்பாலான இடங்களில் உள்ள சாலைகளில் மழை நீர் வடிந்து மழை பெய்த தடயமே இல்லாமல் காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் சிரமமின்றி பயணிக்க முடிகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை மழை வெளுத்தெடுத்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

சென்னையில் 21 சுரங்கபாதைகளிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஒரு கார் அந்த மழை நீரில் சிக்கியது. மார்பளவு தண்ணீரில் சிக்கிய அந்த காரை அப்பகுதி மக்கள் சேர்ந்து உதவி செய்து மேடான இடத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் இந்த மழையால் வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி, சொக்கலிங்கம் காலனி, முடிச்சூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் உள்புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதித்தனர்.

மழை பெய்து கொண்டிருந்த போது மழை பாதிப்பு பகுதிகளுக்கு வந்த சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் மழை நீரை வடிய வைக்கும் பணிகளை முடுக்கி விட்டார். ஆங்காங்கே விழுந்து கிடந்த மரங்களையும் அகற்றும் பணிகள் நடந்தன.

அது போல் சுரங்க பாதைகள், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் வெள்ள நீர் மோட்டார் போட்டு உறிஞ்சப்பட்டது. இத்தனை பணிகளையும் சென்னை மாநகராட்சி செய்ததன் விளைவு காலை எழுந்ததும் மழை பெய்த தடமே இல்லை. சாலைகள் எல்லாம் டிரையாகி இருக்கின்றன.

வடசென்னையான பாரிமுனை, கத்திவாக்கம், திருவொற்றியூர், பிராட்வே பகுதிகளில்தான் அதிக மழை நீர் தேங்கியது. இன்று காலை அந்த பகுதிகளில் எல்லாம் வெள்ள நீர் அவ்வளவாக இல்லாத அளவுக்கு மாநகராட்சி ஊழியர்கள் வடியவிட்டனர்.

திமுக என்ன செய்தது?
இதை தவெக அரசு செய்தது என்றாலும் இது போல் மழை நீர் வடிவதற்கு அடிதளமிட்டது திமுக என்பதை மறந்துவிடக் கூடாது. திமுக ஆட்சியில் மேற்கொண்ட உள்கட்டமைப்பு பணிகள்தான் நேற்று பெய்த அடைமழையில் இருந்து மக்களை காத்தது என சொல்லலாம். திமுக ஆட்சி காலத்தில் சென்னையில் ஏற்படும் மழை வெள்ள பாதிப்புகளைத் தடுப்பதற்கும் மேலாண்மை செய்வதற்கும் திருப்புகழ் ஐஏஎஸ் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி மழை நீர் தடுப்பு குறித்து ஆய்வு செய்து 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை திமுக அரசிடம் தாக்கல் செய்துவிட்டது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,144 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அது போல் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அதிநவீன வடிகால் அமைப்புகளும் 220 கி.மீ. தூரம் வடிகால் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.
சென்னை மாநகராட்சியில் 87 முக்கிய வெள்ள அபாய பகுதிகளில் 85 பகுதிகள் ஆபத்தான கட்டத்தில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான மண்டலங்களாக மாற்றப்பட்டன. வடசென்னையில் வெள்ள பிரச்சினைக்கு தீர்வு காண ரூ 1000 கோடி நிதி ஒதுக்கீட்டில் உள்கட்டமைப்பு மற்றும் வடிகால் மேம்பாட்டு பணிகள் திட்டமிடப்பட்டன.
5000 கோடி செலவு
கடந்த திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகளுக்கென 5000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இவையெல்லாம்தான் தற்போது மழை காலத்தில் கைக் கொடுத்துள்ளன. எனவே மோட்டாரை வைத்து உறிஞ்சினால் தண்ணீர் எங்கே போகும், மழை நீர் வடிகாலில்தானே! அதை ரெடி செய்தது திமுக! சென்னையில் நேற்று இரவு மழை நீர் அதிகம் தேங்கியிருந்த சாலைகள் இன்று காலை எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
அசோக் நகர்+ கிண்டி
அசோக்நகரில் கனமழை பெய்த போதிலும் அங்கு உள்ள ஒரு மேம்பாலத்திற்கு கீழ் தண்ணீர் வடிந்து போக்குவரத்துக்கு தகுதியான வகையில் அமைந்துள்ளது. அது போல் கிண்டியில் உள்ள சாலைகளில் ஒரு சொட்டு மழை நீர் கூட இல்லை.

ஈக்காட்டுத்தாங்கல்
ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் தாழ்வாக இருந்த நிலையிலும் அங்கு அந்த அளவுக்கு தண்ணீர் தேங்காதவாறு மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டிருக்கிறது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் மெட்ரோ பணிகள் உள்ளிட்டவைகளால் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டும், சரிசமமாக இல்லாத வகையிலும் காட்சியளிக்கிறது. இங்கெல்லாம் பெய்த மழைநீர் கூட வடிந்துவிட்டது.

இன்று மாலையும் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இன்றும் இதே போல் மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றி மழை பெய்ததே தெரியாத அளவிற்கு மாற்றப்படும் என தெரிகிறது.




Click it and Unblock the Notifications
