எல்லாமே எங்க எடப்பாடி.. ஏகே 47 மாதிரி பாதுகாப்போம்! வேறொரு கோஷ்டிக்கு இடமில்லை! அதிமுக மாஜி சுளீர்!
எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர். அவர் எப்போது நினைக்கிறாரோ அப்போதுதான் பொதுக்குழுவைக் கூட்ட முடியும் எனக் கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. மேலும், த.வெ.க.வுக்குச் சென்றவர்கள் சந்தோஷமாக இல்லை; அதிமுகவுக்குத் திரும்பி வர காலத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 227-வது நினைவு நாளை முன்னிட்டு, கயத்தாறில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, சண்முகநாதன், செல்லப்பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," அதிமுக தற்போதும் எழுச்சியுடன்தான் இருக்கிறது. தேர்தல் தோல்விகளை வைத்து தவறான கணக்குப் போட்டால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும்.
ராஜேந்திர பாலாஜி
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் அதிமுக பெற்ற வாக்குகள், எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகும். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைவதற்கோ, சிரிப்பதற்கோ அது பெரிய வெற்றி கிடையாது. 10 நிமிடத்தில் கொத்து பரோட்டா போட்டு வெற்றி பெறுவோம் என்று சொன்ன விஜய், 5 மணி நேரம் டிராக்டரில் ஏறி, டீக்கடையில் டீ குடித்து, முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறித்து எனப் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு, ஐந்து மணி நேரம் சுற்றுப்பயணம் செய்துதான் இந்த வெற்றியைப் பெற முடிந்துள்ளது.
இடைத்தேர்தல் வெற்றி
இது ஆளும் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் அல்ல. ஊராட்சி மன்றத் தலைவர்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊர் பெரியவர்கள் ஆகியோரை மிரட்டி, த.வெ.க.வுக்கு வாக்களிக்கச் செய்து பெற்ற வெற்றி. இது பெரிய வெற்றி கிடையாது. பென்னாகரம் இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது அதிமுக மூன்றாவது இடத்தைப் பிடித்தது. டெபாசிட்டையும் இழந்தது. அதற்குப் பிறகு ஒன்றரை ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த வரலாறு உண்டு.
த.வெ.க
அதேபோன்று, எடப்பாடி பழனிசாமி தலைமையையும் அதிமுகவையும் குறை கூறுபவர்கள், அதிமுக மூன்றாவது இடத்தில் இருப்பதாகக் கூறுபவர்கள், நிச்சயமாக வாய்பொத்தி நிற்கக்கூடிய காலம் விரைவில் வரும்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எழுச்சி பெற்ற இயக்கமாக மாறும். தற்போது மாறிக்கொண்டும் இருக்கிறது. இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கு மக்கள் போட்டுத் தொலைப்போம் என்று போட்ட வாக்குகள்தான் அவை. ஆளும் கட்சியைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று போட்ட வாக்குகள்தான் அவை.
எடப்பாடி பழனிசாமி
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைப் போன்று எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் தலைவர். கிராமங்களில்கூட இரட்டை இலை என்றால் எடப்பாடி பழனிசாமிதான் என்று சொல்லும் அளவுக்கு அவரது பெயர் பட்டி தொட்டியெங்கும் பரவியுள்ளது. இதைத் தாண்டி, வேறொரு தலைவர், வேறொரு கோஷ்டி என்பதற்கெல்லாம் அதிமுகவில் இடமில்லை. அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஏ.கே.47 ஆக மாறி எடப்பாடி பழனிசாமியைப் பாதுகாப்பார்கள் என்பது உறுதி.
அதிமுக பொதுக்குழு
எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர். அவர் எப்போது நினைக்கிறாரோ அப்போதுதான் பொதுக்குழுவைக் கூட்ட முடியும். வெளியில் இருந்து அவரை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. அவருக்குக் கட்டளையிட முடியாது. கட்டளையிட்டு கட்சியைக் கைப்பற்ற நினைத்தால் அது கானல் நீராகிவிடும். அது ஒருபோதும் நடக்காது" என கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications
