நல்லது தான் செஞ்சோம்..மானபங்கப்படுத்திட்டாங்க அண்ணா! விஜயிடம் கதறிய பெண் நிர்வாகிகள்! பறந்த விளக்கம்
சென்னை: சென்னை வியாசர்பாடியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கச் சென்ற தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த இரு பெண்களை காவல்துறையினர் தாக்கியதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில், அவர்களிடம் விஜய் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார். இந்த நிலையில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என காவல்துறை விளக்கம் அளித்திருக்கிறது.
சென்னை வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் கடந்த 26 ஆம் தேதி இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல வீடுகள் தீக்கிரையான நிலையில், பொதுமக்கள் வீடுகளை இழந்து சாலையோரங்களில் குடிபுகும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. உணவு, உடை, போர்வைகள் ஆகியவற்றை தவெக நிர்வாகிகள் வழங்கிய நிலையில் அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதோடு தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த பெண் நிர்வாகிகள் இருவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் விஜய். அதில்,"சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று செயல்பட்டதால், உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, பல குடிசைகள் தப்பியுள்ளன.
தீவிபத்தில் குடிசைகளை இழந்த மற்றும் முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள், தற்காலிகமாக அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சென்று அங்கிருந்தவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உடை, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் உணவும் வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களும் தாமாக முன்வந்து பெற்றுக்கொண்டனர்.
இதனைப் பார்த்த காவல்துறையினர், த.வெ.க. நிர்வாகிகளைத் தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டியுள்ளனர். காவல் துறையினர் வரம்பு மீறிப் பேசி, அத்துமீறிச் செயல்படுவதைப் பார்த்த கழகத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கங்காவதி(45), மக்களுக்கு உதவி செய்வதைத் தடுப்பது ஏன் என்று காவல் துறையினரை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது காவல்துறையினர் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி, கழக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கங்காவதியின் வயிற்றில் எட்டி உதைத்து, கீழே தள்ளியுள்ளனர். மேலும், இதைத் தடுக்கச் சென்ற கழக மகளிரணியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியின் ஆடையைக் காவல் துறையினர் பிடித்து இழுத்துத் தள்ளி விட்டுள்ளனர். காயமடைந்த கழக உறுப்பினர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்." என கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர்களிடம் தொலைபேசியில் பேசிய விஜய் உடல் நலன் குறித்து கேட்டு அறிந்ததோடு விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக கூறினார்.
தலைவர் தளபதி விஜய்@tvkvijayhq அண்ணா அவர்கள் தொலைபேசியில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நலம் விசாரித்து உரையாடினார் 🙏 pic.twitter.com/0cJ43aEvIE
— Sangeetha -TVK✨ (@sangeet29332013) May 27, 2025
அப்போது "அண்ணா உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கணும்னு தான் நாங்க உதவி பண்ணோம். ஆனா போலீஸ் எங்களை அடிக்கிறாங்க" என அவர்கள் கண்ணீர் மல்க பேசினார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
#வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் குடிசை பகுதியில் ஏற்பட்ட தீ 🔥விபத்து மற்றும் அதன் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுக்கள் பற்றிய விளக்கம்.📝#ThinkBeforeYouShare #StopFakeNews #SpreadTruthNotLies #ResponsibleSharing #CheckYourSources #ChennaiPolice… pic.twitter.com/t6UDabv2Qt
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) May 27, 2025
இதனுடைய தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தாக்கப்பட்ட தகவலுக்கு சென்னை காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள விளக்கத்தில்,"வியாசர்பாடியில் தீ விபத்து சம்பவத்தில் யாரையும் காவல்துறையினர் தாக்கவில்லை கட்சியில் விளம்பரம் வேண்டும் என்பதற்காகவும் அங்கீகாரம் பெறுவதற்காக சிலர் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் வியாசர்பாடி சம்பவம் தொடர்பாக விரிவான காவல்துறை விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்" என சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications