சென்னையில் அடையாளமே மாறிய தொல்காப்பியப் பூங்கா.. இன்று முதல்வர் திறக்கும் பூங்காவில் உள்ள வசதிகள்
சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மேம்படுத்தப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் ரூ.42.45 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தொல்காப்பியப் பூங்கா பகுதி 1, 2ஐ இணைத்து சாந்தோம் சாலையில் உயர்மட்ட நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் குறுக்கே குழாய் கால்வாய்க்கு மாற்றாக 3 வழி பெட்டக கால்வாய் அமைக்கப்பட்டிருக்கிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கடந்த 2008-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம், 58 ஏக்கர் பரப்பினை கொண்ட அடையாறு உப்பங்கழியினை சீரமைத்து, 'தொல்காப்பியப் பூங்கா' உருவாக்கப்பட்டது. இந்த பூங்காவை 22.01.2011 அன்று அன்றைய முதல்வர் கருணாநிதியால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையான பராமரிப்பின்றி தொல்காப்பியப் பூங்கா பொலிவிழந்தது. இதையடுத்து பல்வேறு புதிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் மறுமேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி ஜூலை 2021-ஆம் ஆண்டு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையினால் 'தொல்காப்பியப் பூங்கா மறு மேம்பாட்டு' பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் தொல்காப்பியப் பூங்காவின் மறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு 42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கி இருந்தது. அதன்பின்னர் தொல்காப்பியப் பூங்காவின் மறு மேம்பாட்டு பணிகளை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மேற்கொள்ள ஆரம்பித்தது. அதன்படி நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மையம், பார்வையாளர் மாடம், நடைபாதை, சிற்றுண்டியகம், புதிய கழிப்பறை, திறந்தவெளி அரங்கம், இணைப்புபாலம், கண்காணிப்பு கேமராக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் தொல்காப்பியப் பூங்கா பகுதி 1 மற்றும் பகுதி 2 இணைத்து சாந்தோம் சாலையில் உயர்மட்ட நடைமேம்பாலம் (Skywalk) அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலையின் குறுக்கே இருக்கும் குழாய் கால்வாய்க்கு மாற்றாக மூன்று வழி பெட்டகக் கால்வாய் (Triple Cell Box Culvert) அமைக்கும் பணிகள் முடிந்தது. கடந்த அக்டோபர் 1ம் தேதி அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தொல்காப்பியப் பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தொல்காப்பியப் பூங்காவினை மக்களின் முழு பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து மீதமிருந்த பணிகள் முடிக்கப்பட்டது. இதையடுத்து மேம்படுத்தப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த பூங்கா சென்னை ராஜா அண்ணாமலைபுரம், எம்ஆர்சி நகர், மந்தைவெளி, அடையாறு, பட்டினம்பாக்கம், மயிலாப்பூர் பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications