விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் டிராக்டர்! முன்னோடி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: வேளாண்மைத்துறை மூலமாக விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் டிராக்டர் இயக்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
தனியாரிடம் டிராக்டர் வாடகைக்கு எடுத்தால் கொடுக்க வேண்டிய தொகையை காட்டிலும் இதற்கு குறைந்த வாடகை தான் என்பதால் விவசாயிகள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு பெற்றிருக்கிறது.
தங்கள் விளை நிலங்களை உழுவதற்காக நடப்பாண்டில் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் 25,078 பேர் முன் பதிவு செய்திருக்கிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

185 டிராக்டர்கள்
வேளாண்மைப் பொறியியல் துறையால் 22 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள 185 டிராக்டர்கள், 185 ரோட்டவேட்டர்கள் மற்றும் 185 கொத்து கலப்பைகள் ஆகியவற்றை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகையில் வழங்கிடும் அடையாளமாக, ரோட்டவேட்டர்கள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்கள் மற்றும் கொத்துகலப்பைகள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்கள் ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வரலாற்றில் முதல்முறையாக
வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழக வரலாற்றில் முதல்முறையாக, விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை - உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.

வேளாண் பட்ஜெட்
2021-22 ஆம் ஆண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில் "விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களைக் குறைந்த வாடகைக்கு வழங்கும் திட்டத்தினை, நடப்பாண்டில் மேலும் வலுப்படுத்துவதற்காக, 185 டிராக்டர்கள், 185 ரோட்டவேட்டர்கள், 185 கொத்துக் கலப்பைகள், 120 கேஜ் வீல்கள், நவீன முறையில் பூச்சி மருந்துகள் தெளிக்க 4 ட்ரோன்கள் ஆகியவை 23 கோடியே
29 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.

உழவுப் பணிகள்
அந்த அறிவிப்பிற்கிணங்க, விவசாயிகள் உழவுப் பணிகள் மற்றும் இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள ரூ.22.89 கோடி மதிப்பீட்டில் 185 டிராக்டர்கள், நிலங்களில் உள்ள அப்புறப்படுத்தப்பட வேண்டிய செடி மற்றும் இதர புல் பூண்டுகளை பற்பல துண்டுகளாக்கி மண்ணுடன் கலந்து நிலத்திற்கேற்ற உரமாக்கும் வகையில் 185 ரோட்டவேட்டர்கள், மண் கட்டிகளை உடைத்து, நிலத்தின் கடினத் தன்மையை குறைத்து, முதல் நிலை உழவுக்கு பயன்தரக் கூடிய 185 கொத்து கலப்பைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

வேளாண் இயந்திரங்கள்
இதேபோல் சேற்று உழவிற்கு 120 கேஜ் வீல்கள் போன்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கிடுவதற்காக வேளாண்மைப் பொறியியல் துறையால் 22 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் 185 டிராக்டர்கள், 185 ரோட்டவேட்டர்கள் மற்றும் 185 கொத்து கலப்பைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

திட்டம் தொடக்கம்
இவ்வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகையில் வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று, ரோட்டவேட்டர்கள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்கள் மற்றும் கொத்துகலப்பைகள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்கள் ஆகியவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications