10 ஆண்டுகள் புறம்போக்கு நிலத்தில் வசித்தால் பட்டா.. முதல்வரின் மேஜர் முடிவு.. அமுதா ஐஏஎஸ் தகவல்
சென்னை: ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற போது முதலமைச்சர் ஸ்டாலின் இந்த தகவலை தெரிவித்ததாக அமுதா ஐஏஎஸ் கூறியுள்ளார். இதுவரை சென்னையில் 60000 க்கும் மேற்பட்ட பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 86,368 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
தமிழக சட்டசபை வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ள நிலையில், அப்போது தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதன் முன்னோட்டமாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கடந்த பிப்ரவரி 12ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், நேரு உட்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றார்கள்.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. அன்று செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், "ஏழை மக்களுக்கு நிவாரணத்தில் மிகப்பெரிய புரட்சியை முதல்வர் ஸ்டாலின் செய்திருக்கிறார். சென்னையை சுற்றியிருக்கக்கூடிய 4 மாவட்டங்களில், 'பெல்ட்' ஏரியா என்று சொல்லக்கூடிய பகுதிகளில் இருக்கக்கூடிய 32 கி.மீ. பரப்பளவில் குடியிருப்பவர்கள், ஆக்கிரமிப்பு செய்து நீண்ட நெடுங்காலமாக வசிக்கிறார்கள். ஆனால் அவர்கள் பட்டா பெற முடியாமல் சிரமப்படுவது, அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்ய முடியாமல் இருப்பது, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன்படி, சென்னையை சுற்றி இருக்கக்கூடிய 4 மாவட்டங்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதியில் இருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில், சென்னையில் மட்டும் 29 ஆயிரத்து 187 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதியில் குடியிருந்து வருகிறார்கள் அவர்களுக்கெல்லாம் பட்டா வழங்குவதற்கான பணிகளை 6 மாத காலத்திற்குள் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அமலில் உள்ள இந்த 'பெல்ட்' ஏரியா சட்டம் 1962-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டிருந்தது. 1962-ம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு வரை அதன் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. தற்போது தான் பெல்ட் ஏரியா பகுதி தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், மிகத் தெளிவாக ஒரு முடிவெடுத்து, 6 மாதத்திற்குள் பட்டா வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைக்கப்பட உள்ளது. உடனடியாக அந்தப் பணிகளை தொடங்கி 6 மாத காலத்திற்குள்ளாகவே முடிக்கப்பட உள்ளது.
சென்னை மட்டுமின்றி மதுரை, நெல்லை போன்ற மாநகராட்சிகளில் இதுபோன்ற பிரச்சினை உள்ளது. அங்கே இருப்பவர்களுக்கும் பட்டா வழங்கப்பட உள்ளது. . மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகரில் இருக்கக்கூடிய பகுதிகளில் எல்லாம் சேர்த்து, மொத்தம் 57 ஆயிரத்து 84 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதியில் குடியிருந்து வருபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் பட்டா வழங்கப்பட வேண்டியிருக்கிறது..அந்த வகையில், 86 ஆயிரம் பேருக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி பட்டா வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் கூறினார்.
இந்நிலையில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை செனாய் நகரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய வருவாய் துறை செயலாளர் அமுதா ஐ ஏ எஸ், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசும் போது, ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதுவரை சென்னையில் 60000 க்கும் மேற்பட்ட பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 86,368 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
அதேநேரம் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்கள் எவை எவை எல்லாம் பட்டா பெற தகுதி உள்ளவை என்பது குறித்து விரைவில் அரசு வெளியிடப்போகும் அரசாணையில் மட்டுமே தெரியவரும். அதேநேரம் தற்போது அரசின் பட்டியலின்படி, ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்கள் என்றால், களம் புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு, பாதை புறம்போக்கு, அனாதீனம் ஆகியவை ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவை உள்ளன. .பொதுவாக ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களுக்கு தனிநபர் பெயரில் பட்டா வாங்க முடியும். அதற்கு அரசு முடிவெடுத்து அவ்வப்போது அறிவிக்கும். அப்படித்தான் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு பட்டா கிடைக்க போகிறது.
எனினும் நீர்நிலைகளில் வசிப்போருக்கு, சாலைகளை ஆக்கிரமித்து வசிப்போருக்கு, ஓடைகளை ஆக்கிரமித்து வசிப்போருக்கு, பாதைகளை ஆக்கிரமித்து வசிப்போருக்கு எந்த காலத்திலும் பட்டா தர வாய்ப்பு இல்லை.. அப்படியே மோசடி செய்து பட்டா வாங்கினாலும், நீதிமன்றத்தில் யாராவது வழக்கு போட்டால், கண்டிப்பாக அந்த நிலத்தில் வசிப்பவர்களுக்கு சிக்கல் வரும் அதிக வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications