பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசுக்கு துணை நிற்போம்.. சட்டசபையில் அடித்துச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை இன்று தமிழக சட்டப்பேரவையில் கண்டித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். "பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும்" என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 27 பேர் பலியாகி உள்ளனர். பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 27 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது.

CM Stalin Condemns Pahalgam Terror Attack Pledges TN s Support to Centre s Anti-Terror Efforts

பஹல்காம் தாக்குதல்

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இவர்கள் எப்படி இந்த தாக்குதலை திட்டமிட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இந்நிலையில், தமிழக சட்டசபையில், ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு, கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்து கொள்கிறேன். சுற்றுலா தலத்தில் நேற்று பயங்கரவாதிகள் மிகக் கொடூரமான தாக்குதல்களை நடத்தி இருக்கிறார்கள்.

சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட தகவல், அதிர்ச்சியையும், துயரத்தையும் அளித்துள்ளது. காஷ்மீரில் மிக பிரபலமான சுற்றுலா தலமான பஹல்காமிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அப்பாவி மக்கள் மீது இது போன்று நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இரும்புக்கரம் கொண்டு

இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. அங்கு மோசமான சூழல் நிலவுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமைந்து இருக்கிறது. பயங்கரவாத அமைப்புகள், பங்கரவாதிகள் எத்தைகைய எண்ணம் கொண்டவராக இருந்தாலும், அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்த தாக்குதலில் இதுவரை 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற தகவல் எனக்கு கிடைத்த உடன், டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு மையம் செயல்படுவதற்கு உத்தரவிட்டு இருக்கிறேன். அனைவருக்கும் தேவையான உதவிகளை செய்யவும், மருத்துவ வசதிகளை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய மண்ணில் இடமில்லை

பயங்கரவாத தாக்குதல் நடக்க இந்திய மண்ணில் இடமில்லை. இந்த தாக்குதல்களை தடுத்து ஆக வேண்டும். இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திட மத்திய அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்திட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். அத்தகைய நடவடிக்கையை எடுத்திட தமிழக அரசு, மத்திய அரசுக்கு துணை நிற்கும் என்ற உறுதியை அளிக்கிறேன்.

2017 ஆம் ஆண்டு குல்காமில் அமர்நாத் பயணம் சென்ற மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டார்கள். 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற வகையில் அப்பாவி மக்களின் மீதான இது போன்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்திய மண்ணில் குறிப்பாக, நமது இந்திய ஜனநாயகத்தில் அறவே இடமில்லை.

இதனைக் கண்டிப்பதோடு நமது கடமை முடிந்துவிடவில்லை. இது போன்ற செயல்கள் நடப்பதை அறவே தடுத்தாக வேண்டும். பேரவைத் தலைவர் அவர்களே, கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அனைவரும் எழுந்து இரண்டு நிமிட அமைதி அஞ்சலியைச் செலுத்த தங்களது மேலான அனுமதியைக் கோருகிறேன்." எனப் பேசினார்.

2 நிமிடம் அஞ்சலி

முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க, உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைத்துக் கட்சியின் சார்பில் உறுப்பினர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்து உரையாற்றினர்.

பிறகு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “காஷ்மீரில் நடைபெற்ற துயர சம்பவம் குறித்து இந்த அவையில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் தங்களுடைய வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறார்கள். நமது நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கக்கூடிய இந்தக் கொடூரமான சம்பவத்திலே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நமது அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திட ஒன்றிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டுமென்று இந்த அவையின் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன்.

அத்தகைய அனைத்து நடவடிக்கைகளை எடுக்கிற நேரத்தில் தமிழ்நாடும், தமிழ் மக்களும் என்றும் துணை நிற்பார்கள் என்று உறுதியை உங்கள் அனைவரின் சார்பிலும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+