அன்பு மகன் மனோஜை இழந்து வாடும் பாரதிராஜாவுக்கு எனது ஆழ்ந்த ஆறுதல்! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை: அன்பு மகனை இழந்து வாடும் பாரதிராஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான திரு. மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் திரு. மனோஜ் அவர்கள். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.
இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனும், திரைப்பட நடிகருமான திரு.மனோஜ் பாரதிராஜா அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன் . அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
மகனை இழந்து ஆற்றொண்ணா துயரில் வாடும் திரு.பாரதிராஜா அவர்கள் இத்துன்பத்தில் இருந்து மீண்டு வரும் வலிமையை அளிக்க இறைவனை வேண்டுவதுடன், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். @AIADMKOfficial என தெரிவித்துள்ளார்.
கனிமொழி இரங்கல்: இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இயக்குனர் பாரதிராஜா அவர்களின் மகனும், இயக்குனர் மற்றும் நடிகருமான திரு. மனோஜ் கே பாரதி அவர்களின் மறைவுச் செய்தியறிந்து துயருற்றேன். இத்துயர்மிகு வேளையில் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அது போல் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தனது இரங்கல் செய்தியில் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மகனும், நடிகருமான திரு. மனோஜ் பாரதிராஜா அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
திரு. மனோஜ் பாரதிராஜா அவர்களைப் பிரிந்து வாடும் இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்: நடிகரும் எனது ஆத்ம நண்பர் இயக்குநர் பாரதிராஜாவின் புதல்வனுமான மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
தனது அருமை மகனை இழந்து வாடும் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சரத்குமார்: தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ் இயக்குனரும், குடும்பத்தில் ஒருவர் என நெருக்கமான உறவாக இருக்கும் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் அன்பு மகன் மனோஜ் அவர்கள் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த மனவேதனையளிக்கிறது.
சமுத்திரம் திரைப்படத்தில் மனோஜின் மூத்த சகோதரராக நடித்த நாட்களை நினைவுகூறுகிறேன். பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, தனக்கான முத்திரை பதிக்க இறுதி வரை போராடிய இளவலின் மறைவு வாழ்வின் நிலையற்ற நிலையை காட்டுகிறது.
பாரதிராஜா அவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற எங்களிடம் வார்த்தைகளில்லை. சுற்றத்தார்க்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் பேரிழப்பை தந்து மறைந்திருக்கும் மனோஜின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications