வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்களுக்கு.. ஸ்டாலின் தந்த சர்ப்ரைஸ்.. வெளியான முக்கியமான அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் அயலகத் தமிழர் நாள் விழாவில் பங்கேற்ற அயலகத் தமிழர்களுக்குக் கணியன் பூங்குன்றனார் பெயரில் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.
கல்விப்பணிக்கான அயலகத் தமிழர் விருது இராசாராம் இராமசுப்பிரமணியனுக்கு விருது வழங்கப்பட்டது. சமூக வளர்ச்சிப் பிரிவில் ச.கமலக்கண்ணனுக்கும், மகளிர் பிரிவில் ஸ்ரீநிதி சிவானந்தத்துக்கும், வணிகப் பிரிவில் இலட்சுமணன் சோமசுந்தரத்துக்கும், அறிவியல் தொழில்நுட்பப் பிரிவில் ஆரோக்கியராஜுக்கும், மருத்துவப் பிரிவில் கங்காதர சுந்தருக்கும், சிறப்புப் பண்பாட்டுப் பிரிவில் வேர்களைத் தேடி சந்தீப்புக்கும் கணியன் பூங்குன்றனார் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.

விஜய் ஜானகிராமனுக்குத் தமிழ்மாமணி விருதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார். அயலகத் தமிழர் நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழர்கள் வந்திருப்பது புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பாட்டை நினைவுபடுத்துவதாகக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். தான் முதலமைச்சரானபின் ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொண்டபோது தமிழர்கள் சிறப்பான வரவேற்பளித்ததை மறக்க முடியாது என்று குறிப்பிட்டார். அயலகத் தமிழர் நாள் விழாவுக்கு, எத்திசையும் தமிழணங்கே என்னும் கொள்கை முழக்கத்தை வைத்திருப்பதைக் குறிப்பிட்ட அவர், தமிழ்தான் நம் அனைவரையும் இணைப்பதாகவும், அந்த உணர்வோடு தாய்த் தமிழகத்துக்கு வந்திருக்கும் அனைவரையும் வரவேற்பதாகவும் தெரிவித்தார். தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி இந்த மாபெரும் கூடலுக்கு ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் நாசருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இங்குக் கூடியுள்ளோரின் முன்னோர் நூறு, இருநூறு ஆண்டுகளுக்கு முன் வணிகம், தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றதாகவும், அவர்களால் தான் அங்குள்ள பாலைவனங்கள் சோலைவனங்கள் ஆனதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த விழாவுக்கு வந்திருக்கும் உலகத் தமிழர்களும் தமிழ்நாட்டை மறக்கவில்லை. தமிழ்நாடும் அவர்களை மறக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். இந்தியா வளமாக வாழ அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் அயலகத் தமிழர்களைச் சிறப்பிக்கும் வகையில் அயலகத் தமிழர் நாள் விழா கொண்டாடப்படுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். அயலகங்களில் குடிமக்களாக வாழும் தமிழ்மக்களும், அங்குத் தொழிலாளர்களாக இருக்கும் தமிழர்களும் நலமுடன் வாழ்வதற்காகவே அயலகத் தமிழர் நலன்துறை செயல்படுவதாகத் தெரிவித்தார். அயலகத் தமிழர்களுக்காகத் தமிழ்ப் பரப்புரைக் கழகம் தொடங்கப்பட்டுள்ளதை நினைவுகூர்ந்ததுடன், 33 நாடுகளில் 181 மையங்களில் அயலகத் தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் இணையக் கல்விக்கழகம் வாயிலாகத் தமிழ் கற்பித்தல் நடைபெற்று வருவதையும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
போர், இயற்கைப் பேரிடர்க் காலங்களில் அயல்நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களைத் தாய்நாட்டுக்கு அழைத்து வருவது அயலகத் தமிழர் நலன் துறையின் குறிப்பிடத் தக்க பணியாக உள்ளதை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். பலதுறைகளில் சாதனை படைத்த அயலகத் தமிழர்கள் ஆறு பேருக்குக் கணியன் பூங்குன்றனார் பெயரில் விருதுகள் வழங்கியதையும், ஒருவருக்குத் தமிழ்மாமணி விருது வழங்கியதையும் குறிப்பிட்ட முதலமைச்சர், விருதுகளைப் பெற்றோருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார். தமிழ்ச்சொந்தங்களின் உறவுப்பாலத்தை வலுப்படுத்தப் புலம்பெயர் தமிழர்களின் வழித்தோன்றல்களை அழைத்துவந்து அவர்களின் சொந்த ஊர்களுக்குக் கூட்டிச் செல்லும் வேர்களைத் தேடித் திட்டத்தைத் தமது அரசு செயல்படுத்தி வருவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் குறிப்பிட்டார்.
உக்ரைன் - ரஷ்யப் போர், இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் ஆகியவற்றின் போது அந்நாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டுத் தாயகத்துக்கு அழைத்து வந்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். அயலகத் தமிழர் வாரியத்தில் இதுவரை 26 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாகக் கூறினார். பேரறிஞர் அண்ணா சொன்ன, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்னும் கூற்றுப்படி தமது அரசு செயலாற்றி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications