"மன்னர் பரம்பரை" முதல் "முகத்தை மூடி போகமாட்டேன்!" திமுக, அதிமுகவை முதல் நாளே விளாசிய முதல்வர் விஜய்
சென்னை: தமிழகத்தின் 60 ஆண்டுகளில் முதல்முறையாகத் திராவிட கட்சிகளைச் சேராத ஒருவர் முதல்வராகப் பதவியேற்றார். சிஎம் பதவியேற்ற பிறகு அவர் ஆற்றிய உரை, வெறும் நன்றியுரையாக இல்லாமல், அனல் பறக்கும் அரசியல் விமர்சனங்களாக இருந்தது. தனது முதல் உரையை அவர் திமுக, அதிமுக என இரு கட்சிகளையுமே கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
நேரு உள்விளையாட்டு அரங்கமே அதிரும் வகையில், விஜய் முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா என மொத்தம் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். முதல்வராகப் பதவியேற்ற உடனேயே அவர் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பிற்கான சிங்கப்பெண் ரோந்துப் படை, போதைப்பொருள் இல்லாத சமூகத்திற்கான புதிய ரோந்துப் படை அமைக்கும் உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

விஜய்
அதைத் தொடர்ந்து அவர் உரையாற்றும்போது, திமுக -அதிமுக என இரு கட்சிகளையுமே கடுமையாக விமர்சித்தார். விஜய் தனது உரையில், "நான் ஒன்றும் மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் அல்ல; ஒரு உதவி இயக்குநரின் மகனாக வாழ்க்கையைத் தொடங்கியவன்" என அழுத்தமாகக் குறிப்பிட்டார். உதயநிதியை விமர்சிக்கும் வகையிலேயே விஜய் இதைப் பேசியிருந்தார்.
திமுக மீது தாக்கு
முன்னதாக விசிகவில் ஆதவ் அர்ஜுனா இருந்தபோது, உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக 'மன்னர் பரம்பரை' என விமர்சித்திருந்தார். இன்றும் திமுகவின் வாரிசு அரசியலை விஜய் நேரடியாகக் குறிவைத்துச் சாடினார். மேலும், திமுகவை மறைமுகமாகச் சாடும் வகையில் பவர் சென்டர்கள் எதுவும் இருக்காது.. தன்னிடம் மட்டுமே அதிகாரம் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "பத்து லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். கஜானா காலியாக இருக்கிறது. உள்ளே போய் பார்த்தால்தான் எங்கு என்ன இருக்கிறது என்று தெரியும். விரைவில் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்" என அதிரடி காட்டினார். திமுகவின் நிர்வாகம் தோல்வி அடைந்து இருந்தது என்பதை விமர்சிக்கும் வகையில் இதைக் குறிப்பிட்டார்.
அதிமுக
பிரச்சார காலத்தில் விஜய் அதிமுகவை ஒரு முறை கூட நேரடியாக விமர்சித்ததே இல்லை. எப்போதும் மற்றும் பலர் என்றே குறிப்பிட்டு வந்தார். ஆனால், இன்று அதிமுக மீதான விஜய்யின் விமர்சனம் மிகக் கூர்மையாக இருந்தது. அமித் ஷா உடனான சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமி தனது முகத்தை மூடிக்கொண்டு சென்றதாகச் சமூக வலைத்தளங்களில் எழுந்த விமர்சனங்களை விஜய் இங்கே கையில் எடுத்தார். "எதையும் அல்லது யாரையும் சந்திக்கச் செல்லும்போது முகத்தை மூடிக்கொண்டு செல்ல மாட்டேன். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகத்தான் செய்வேன்" என அடித்துக் கூறினார்.
தேவதூதன்
இறுதியாக, "நான் ஒன்றும் தேவதூதன் இல்லை... சாதாரண மனிதன் தான். இத்தனை கோடி மக்கள் என் பின்னால் இருக்கும்போது எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற துணிச்சல் வருகிறது" என மாஸ் காட்டிப் பேச்சை முடித்தார். போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றிற்குத் தனது ஆட்சியில் முதலிடம் உண்டு என்பதையும் உறுதிப்படுத்தினார்.
விஜய் முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல் பேச்சிலேயே அவர் யாரையும் விட்டுவைக்கவில்லை. திமுகவின் வாரிசு அரசியலையும், அதிமுகவின் சீக்ரெட் சந்திப்பு அரசியலையும் ஒரே மேடையில் விளாசித் தள்ளி இருக்கிறார் விஜய்!












Click it and Unblock the Notifications