ஸ்டாலின் கையில் இருந்த கத்தி.. இப்போது அதிமுக கொடுத்த கேடயம்.. விஜய் கிரேட் எஸ்கேப்!
சென்னை: தவெக தலைவர் விஜய் இப்போது முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இருப்பினும், விஜய்க்கு சிக்கல் இல்லாமல் இல்லை. விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள் விஜய்க்கு 'வெளியிலிருந்து ஆதரவு' எனச் சொல்லியிருப்பது விஜய்க்கு குடைச்சலையே கொடுப்பதாக இருக்கிறது. இந்த சிக்கலில் தவித்த விஜய்க்கு நிம்மதி கொடுக்கும் வகையில் இப்போது பிளான் பி ஒன்று விஜய்க்கு வந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தமிழ்நாட்டில் இப்போது விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விஜய் முதல்வராகப் பதவியேற்ற நிலையில், நேற்று திங்கள்கிழமை அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர். இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டார். இப்போது வரை விஜய்க்கு எந்தவொரு சிக்கலும் இல்லாமலேயே இருக்கிறது.

விஜய்
ஆனாலும், விஜய் ஆட்சிக்குச் சிக்கல் இல்லாமல் இல்லை. 107 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவோடு தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், விஜய்க்கு மெஜாரிட்டி எனும் 118-ஐத் தொடக் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் மட்டுமே தானாக வந்து எடுத்தவுடன் ஆதரவு கொடுத்தனர். தேர்தலுக்கு முன்பே கூட தவெக- காங்கிரஸ் பேச்சுகளும் இருந்தது. இதனால் இப்போதைக்குக் காங்கிரஸால் தவெகவுக்கு பிரச்சினை வராது.
ஸ்டாலின்
அதேநேரம் இரு இடதுசாரி கட்சிகள், விசிக, ஐயுஎம்எல் ஆகியவை தாங்கள் இன்னுமே திமுக கூட்டணியிலேயே இருப்பதாகக் கூறினர். அதாவது இப்போது ஆட்சி அமைக்க முடியாத சூழல் இருப்பதாலேயே விஜய்க்கு ஆதரவு கொடுப்பதாகவும் அதேநேரம் தாங்கள் திமுக கூட்டணியிலேயே தொடர்வதாகவும் கூறி வந்தனர். அதாவது விஜய் தனது அரசியல் எதிரி என்று யாரைச் சாடினாரோ, அதே மு.க. ஸ்டாலின் நினைத்தால் விஜய் ஆட்சிக்குச் சிக்கல் வரும் என்ற சூழலே இருக்கிறது.
விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள் விஜய்க்கு 'வெளியிலிருந்து ஆதரவு' என்று சொன்னாலும், அவர்களின் இன்னும் திமுக உடனேயே கூட்டணியில் தொடர்வதால், விஜய் அரசு இப்போதும் ஸ்டாலின் கைகளிலேயே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
நாகரீக அரசியல்
முதலமைச்சராகப் பதவியேற்ற கையோடு, பதவியை விட்டு விலகிய மு.க. ஸ்டாலினை சந்திக்க விஜய் நேரில் சென்றது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முதிர்ச்சியான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு முதலமைச்சர் பதவியேற்ற பிறகு, பதவி விலகிய முதல்வரைச் சந்திப்பது இதுவே முதல்முறை. இந்த நாகரீக அரசியல் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் 'ஆட்சி நீடிக்குமா?' என்ற கேள்விக்கு ஸ்டாலினின் கணக்குதான் விடையாக இருக்கிறது.
விஜய்யை ஆட்சி அமைக்க விடாமல் தடுத்திருந்தால் அது மக்கள் மத்தியில் ஒரு அனுதாப அலையை உருவாக்கிவிடும் என்பதை ஸ்டாலின் நன்கு அறிவார். அதே சமயம், அதிமுக தனக்குள்ளேயே மோதிக்கொண்டு உடையப்போவதையும் அவர் எதிர்பார்த்திருந்தார். இதன் காரணமாகவே விஜய் ஆட்சி அமைக்க திமுக எந்த விதத்திலும் தடையாக இருக்காது என்பதை அறிவித்தார் விஜய்.
பேக்-அப் திட்டம்
இப்படி திங்கள்கிழமை வரை ஸ்டாலின் கைகளில் மெஜாரிட்டி முடிவு இருந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை ஒரு பேக்-அப் திட்டம் தானாகவே வந்து சேர்ந்தது. அதாவது அதிமுக இப்போது இரண்டா பிளவுபட்டு விட்டது. அதில் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான கோஷ்டி, தவெக அரசுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் நெருக்கம் காட்ட முயன்றதே இந்த அதிருப்திக்குக் காரணம் என அவர்கள் குற்றஞ்சாட்டினர்..
சுமார் 30+ எம்.எல்.ஏ-க்கள் இந்த அணியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்களும் ஆதரவு கொடுத்தால் விஜய்யின் பலம் 150ஆக உயரும். இதனால் விஜய் ஆட்சிக்குப் பிரச்சினை வராது. அதேநேரம் கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்க வேலுமணி தரப்புக்கு 32 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. நாளை (புதன்கிழமை) நடக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தான் இந்த 'நம்பர் கேம்' உண்மையான கிளைமாக்ஸை எட்டும்.
பிரச்சனை இல்லை
திமுக ஆதரவு கட்சிகளுடன் ஆட்சியை நடத்துவது எப்போது வேண்டும் என்றாலும் தலையில் தொங்கும் கத்தி போல தான்.. இந்த நேரத்தில் அதிமுகவின் உடைப்பு விஜய்க்கு ஒரு வலுவான கவசமாக மாறியுள்ளது. அதேநேரம் இந்த முரண்பட்ட கூட்டணிகளை வைத்துக்கொண்டு விஜய் எப்படி ஒரு நிலையான ஆட்சியைத் தரப்போகிறார் என்ற கேள்வியும் எழவே செய்கிறது.












Click it and Unblock the Notifications