இல.கணேசன், பொன். ராதா, தமிழிசை.. இவர்களை அமைச்சராக்கியிருக்க வேண்டும்.. கே.எஸ்.அழகிரி அதிரடி
தமிழகத்தை வஞ்சித்து விட்டார் மோடி என்று கேஎஸ் அழகிரி குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னை: "தமிழ்நாட்டில் பொறந்தா, தமிழ்நாட்டுக்காரங்களா? இங்க மக்களோட கொஞ்சம்கூட தொடர்பில் இல்லாத நிர்மலா சீதாராமனும், ஜெய்சங்கரும் எப்படி தமிழர்களின் பிரதிநிதிகள் ஆவார்கள்? தமிழகத்தை மத்தியில் ஒட்டுமொத்தமா புறக்கணித்து இருக்கிறார்கள், இதுக்கு மோடிதான் பொறுப்பு" என்று காரசாரமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் கே.எஸ்.அழகிரி!
நிதியமைச்சராக தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் முழுமையான நிதியமைச்சர் என்று பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
ஆனாலும் பதவி நியமனத்தில் என்னமோ ஒன்று இடிப்பதாக இந்த விஷயத்தில் உள்ளதாக ஒருசிலர் கருதினார்கள். சுருக்கமாக சொல்ல போனால், மத்திய அமைச்சர் பதவிக்கு அதிமுகவை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்தையும் பாஜக ஏமாற்றி விட்டதாகவே சொல்லப்பட்டது.

தமிழகத்தை சார்ந்தவர்கள்
மத்திய அமைச்சர்களாக தேர்ந்தெடுத்த இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று பார்ப்பதைவிட, இருவருமே பாஜகவை சார்ந்தவர்களாக பார்க்கப்படுவதுதான் மேலோங்கி நிற்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதைத்தான் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி பகிரங்கமாக போட்டு உடைத்து உள்ளார். இது சம்பந்தமாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் சொன்ன விஷயம் இதுதான்:

பொன்.ராதாகிருஷ்ணன்
"மத்திய அமைச்சரவையில் அதிமுகவை புறக்கணித்திருந்தாலும், பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், திருமதி.தமிழிசை சவுந்தராஜன் ஆகியோரில் யாருக்காவது வேறு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக்கி மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கியிருக்கலாம்.

மோடிதான் பொறுப்பு
இப்போது பொறுப்பேற்றிருக்கிற நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் இருவரும் தமிழர்கள் என்று சொன்னாலும், தமிழக மக்களோடு தொடர்பில் இல்லாதவர்களை தமிழகத்தின் பிரதிநிதிகளாக கருத முடியாது. ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடிதான் முழு பொறுப்பு" என்று அந்த அறிக்கை நீள்கிறது.
|
அரசியல் நாகரீகம்
இந்த அறிக்கையை பொறுத்தவரை முதல் விஷயம், தமிழக மக்களுடன் தொடர்பில் இல்லாதவர்கள் எப்படி தமிழக பிரதிநிதிகள் ஆவார்கள் என்று கேஎஸ் அழகிரி கேட்பது நியாயமே என்றுதான் சொல்ல தோன்றுகிறது. இல.கணேசன், தமிழிசை சவுந்தராஜன், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு தந்திருக்கலாம் என்று வேறு கட்சி குறிப்பாக நேரடி எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர் இப்படி சொல்லி இருப்பதில் அரசியல் நாகரீகம் மட்டுமில்லை, தமிழக நலனும் நன்றாக பளிச்சென தெரிகிறது!












Click it and Unblock the Notifications