விவேக் இறப்புடன் கொரோனா தடுப்பூசியை இணைக்கக் கூடாது - அமைச்சர் விஜயபாஸ்கர், ஆணையர் பிரகாஷ்
நடிகர் விவேக் இறப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார். நடிகர் விவேக்கின் மறைவு பேரிழப்பு என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்
சென்னை: கொரோனா தடுப்பூசி மீதும் நம்பிக்கை என்பது அவசியமானது. விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதை வேறுவிதமாக இணைக்கக்கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். விவேக் இறப்புக்கும் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் தொடர்பில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிரதமர் முதல் அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டு அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நடிகர் விவேக், வியாழக்கிழமையன்று சென்னை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேட்டி அளித்த விவேக், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று காலையில் விவேக்கின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. நெஞ்சுவலியால் சிரமப்பட்ட விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வடபழனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக்கின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடினர்.
எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை என்று மருத்துவர்கள் நேற்று மாலையில் பேட்டியளித்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு விவேக் மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விவேக் மறைவுக்கு தடுப்பூசி செலுத்தியது காரணமாக இருக்கலாம் என்று பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், விவேக் இறப்புக்கும் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் தொடர்பில்லை என்று கூறினார்.
அரசின் மீதும் , கொரோனா தடுப்பூசி மீதும் நம்பிக்கை என்பது அவசியமானது. விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதை வேறுவிதமாக இணைக்கக்கூடாது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார். இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், விவேக் இறப்புக்கும் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தார் . நடிகர் விவேக்கின் மறைவு பேரிழப்பு தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications