ஹைகோர்ட் ஒரே போடு.. தம்பதி நேரில்தான் ஆஜராகணுமா? விவாகரத்துக்கு வீடியோ கால் மட்டுமே போதுமே.. உத்தரவு
சென்னை: விவாகரத்து வழக்குகளில் தம்பதியரை நேரில் ஆஜராகும்படி நிர்பந்திக்கக் கூடாது என்று குடும்ப நல நீதிமன்றத்துக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வீடியோ கால் மூலம் ஆஜராவது குறித்தும், தன்னுடைய உத்தரவில் நீதிமன்றம் பல்வேறு விவரங்களை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த கணவன் - மனைவி இருவருமே அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.. ஆனால், தம்பதிக்குள் கருத்து வேறுபாடு வெடித்துவிட்டது.. எனவே, பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள்.

வீடியோகால்: ஆனால், இந்த தம்பதிக்கு விசா கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, அவர்களால் சென்னை வர முடியாமல் போனதால், அமெரிக்காவிலிருந்தே வீடியோகாலில் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.. ஆனால், இதை ஏற்க மறுத்த குடும்ப நல நீதிமன்றம், அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகத்திலிருந்து காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும் என்று கூறி, அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய மறுப்பு தெரிவித்தது.
வாக்குமூலம் பதிவு செய்ய குடும்ப நல நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து மனைவி தரப்பில், சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை நேற்றைய தினம் நீதிபதி நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விவாகரத்து: அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், "குற்ற வழக்குகளில் மட்டுமே சம்பந்தப்பட்டவர்களை நேரில் ஆஜராவது கட்டாயம் என்று கூற முடியுமே தவிர, மற்ற வழக்குகளில், குறிப்பாக, விவாகரத்து வழக்குகளில் வீடியோ கால் மூலம் ஆஜராக வாய்ப்பளிக்க வேண்டும்.. எனவே, விவாகரத்து வழக்கு தொடர்ந்த தம்பதிகள் நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே இருவர் தொடர்பான ஆதாரங்களும், உத்திரவாதங்களும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் தம்பதி 2 பேரும், அமெரிக்காவில் பணியில் உள்ளதால் ஒவ்வொரு முறை விசாரணைக்கும் நேரில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று கூறமுடியாது. இன்றைய சூழலில், உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் நீதி கிடைக்கும வகையில் வீடியோகால் விசாரணை விரிவடைந்திருப்பதால், வீடியோகால் மூலமே விசாரணை நடத்துவதை நீதிமன்றம் உறுதிப்படுத்தவேண்டும்.
கட்டாயமில்லை: விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருப்பதால், தம்பதி நேரில் ஆஜராவதால் எந்த பிரயோஜனமும் இருக்க போவதில்லை.. இனிமேல், விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யும்போது மட்டும் சம்மந்தப்பட்ட தம்பதி நேரில் ஆஜரானால் போதுமானது... வீடியோகாலில் ஆஜராகுபவர்கள் தங்களுக்கான அடையாளங்களுடன் எங்கிருந்து ஆஜராகிறார்கள் என தெரிவிக்கும்பட்சத்தில், அனைத்துமே சரியாக இருப்பதாக கருதினால் விவாகரத்து வழங்கலாம்" என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications