போலீஸ்காரர் முகத்தை துண்டால் துடைத்துவிட்ட அரசியல் பிரபலம்! போராட்டத்தில் நெகிழ்ச்சி -என்ன நடந்தது
சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக கூறி, பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று நடந்தது. இந்த போராட்டத்தின்போது பட்ஜெட் நகலை எரிக்க முயன்றபோது போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அப்போது போலீஸ்காரரின் முகத்தில் தண்ணீர் பட்டதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்தது.
கடந்த 2ம் தேதி மத்திய அரசு சார்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு என்று சிறப்பு திட்டம் பற்றிய எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.

இதனால் மத்திய பட்ஜெட்டை தமிழகத்தை ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக பீகார் மாநிலத்துக்கு நிறைய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதனால் இது மத்திய பட்ஜெட் இல்லை. பீகாருக்கான பட்ஜெட் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தான் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து நேற்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை பாரி முனையில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமை வகித்தார். கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா பங்கேற்றார்.

போராட்டத்தின் ஒருபகுதியாக மத்திய அரசின் பட்ஜெட் நகலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தீயிட்டு எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணிக்காக இருந்த போலீசார் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். அதற்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் போலீசார் தீயை அணைத்தனர்.
இந்த வேளையில் போலீஸ்காரரின் யூனிபார்ம் மற்றும் அவரது முகத்தில் தண்ணீர் பட்டது. இதை கவனித்த முத்தரசன் தான் அணிந்திருந்த சிவப்பு நிற துண்டை எடுத்து போலீஸ்காரரின் முகத்தில் இருந்த தண்ணீரை துடைத்துவிட்டார். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையதளத்தில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications