ஷாக் அடிக்கும் மின் கட்டணம்! தமிழ்நாட்டில் ஜூலை முதல் உயர்வு? கூட்டணியில் இருந்தே கிளம்பிய எதிர்ப்பு
சென்னை : மின் கட்டணம் ஜூலை முதல் உயர்த்தப்படும் என தகவல் வெளியாகி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மின் வாரிய கட்டண உயர்வு முன்மொழிவை அனுமதிக்கக் கூடாது என திமுகவின் கூட்டணி கட்சியான சிபிஐ வலியுறுத்தியுள்ளது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள அனுமதியின் பேரில், அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. மின் கட்டண உயர்வு நுகர்வோரை கடுமையாக பாதிக்கும் என்பதால், மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மின்வாரியம் வரும் ஜூலை முதல் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மின் வாரியத்தில் நிலவும் நிதி நெருக்கடியை காரணம் காட்டித்தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.
செப்டம்பரில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டபோது ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என வெளியான செய்தியை அரசு தரப்பில் மறுத்து வந்தனர். ஆனால், இன்று அது உண்மையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒராண்டுக்குள் இருமுறை கட்டண உயர்வு செய்வது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு மின் வாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேறு வழிகள் குறித்து ஆராய வேண்டும். குறிப்பாக, தனியாரிடம் கொள்முதல் செய்யும் விலை குறைப்பு உள்ளிட்ட வழிகள் குறித்து பரிசீலிக்க வேண்டும்.
அதனை தவிர்த்து மின்வாரிய கட்டண உயர்வு முன்மொழிவை ஏற்கக் கூடாது, அனுமதிக்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது" என முத்தரசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications