‘₹’ க்கு பதில் ‘ரூ’.. குறியீட்டை உருவாக்கிய பேராசிரியர் உதயகுமார் சொல்வதென்ன?
சென்னை: நாளை தமிழக பட்ஜெட் தாக்கலாகிறது. இந்நிலையில் பட்ஜெட்டுக்கான லோகோவை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அதில், ரூபாயை குறிக்க பயன்படுத்தப்படும் '₹' குறியீடுக்கு பதிலாக, 'ரூ' என எழுதப்பட்டிருந்தது. இது பற்றி பல்வேறு விவாதங்கள் எழுந்திருக்கின்றன.
இந்நிலையில் ₹ சிம்பிளை உருவாக்கியவர் இது தொடர்பாக செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி கவனம் பெற்றிருக்கிறது.

இந்திய ரூபாய்க்கு என சிம்பிளை வடிவமைக்க வேண்டும் என்று கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு யோசித்திருந்தது. இதற்காக 2009 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி மத்திய அரசு ஒரு பொது போட்டியை அறிவித்தது. இதில் 3,331 வடிவமைப்புகள் பெறப்பட்டன. இறுதியாக தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் உதயகுமாரின் வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. ரூபாய்க்கு '₹' சிம்பிளை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்துவது என்பது, 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.
இன்று இதனை தமிழக அரசு மாற்றியிருப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், "இந்த மாற்றம் குறித்து என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. அரசு முடிவெடுத்து மாற்றியிருக்கிறது. என்ன யோசித்து முடிவெடுத்தார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது. தமிழை முன்னிறுத்த இந்த முடிவை எடுத்திருக்கலாம்" என்று கூறியிருக்கிறார். இவரது பேட்டி சோசியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் இந்த மாற்றத்திற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "திமுக அரசின் 2025-2026ம் ஆண்டு பட்ஜெட் அறிக்கை லோகோவில் ரூபாயின் அடையாள குறியீடு மாற்றப்பட்டிருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த உதயகுமார் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த ரூபாய் குறியீடு நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ரூபாய் தாள்களிலும் இடம்பெற்றிருக்கிறது. இந்த லோகோவை உருவாக்கியவர் முன்னாள் திமுக எம்எல்ஏவின் மகன்" என்று கூறி முதல்வரை விமர்சித்திருந்தார்.
இந்த மாற்றத்தால் எந்த சட்ட சிக்கலும் வராது என்று திமுகவினர் கூறி வருகின்றனர். இருப்பினும் சோஷியல் மீடியாக்களில் திமுக vs எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனை மீது விவாதங்களை செய்து வருகின்றன.
மும்மொழிக்கொள்கையில் மத்திய அரசு விடாப்பிடியாக இருக்கிறது. தமிழகத்தில் மூன்று மொழியை கற்பித்தால்தான் ரூ.2000 கோடியை விடுவிக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் கறாராக கூறியிருக்கிறார். ஆனால் இந்த விஷயத்தில் மத்திய அரசு விடாப்பிடியாக இருக்கிறது. இந்த நேரத்தில் '₹' குறியீட்டுக்கு பதில் 'ரூ' என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
ரூபாய் '₹' குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டபோது, மத்திய அரசாங்கத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) ஆட்சியில் இருந்தது. இந்த காலகட்டத்தில், மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதம மந்திரியாகவும், பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சராகவும் பதவி வகித்தனர். தமிழகத்தில் முதலமைச்சராக மு.கருணாநிதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications