தருமபுரி பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரை அடுத்த சின்னமுறுக்கம்பட்டியில் ராசிபுரம் பகுதியில் வசித்து வருபவர் சின்னதுரை. இவர் சொந்தமாக நாட்டு வெடிபொருள்கள் தயாரிக்கும் பட்டாசு கிடங்கு ஒன்றை செயல்படுத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலை கிடங்கில் செண்பகம், திருமலர் உள்பட நான்கு பேர் வெடிபொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த கிடங்கில் இன்று மதியம் எதிர்பாராத திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வெடி பொருள்கள் வெடித்துச் சிதறியதில் அந்த கிடங்கில் வேலை செய்து கொண்டிருந்த செண்பகம், திருமலர், திருமஞ்சு ஆகிய மூன்று பெண்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மதிய உணவு சாப்பிடுவதற்காக வெளியில் சென்றதால் அவர் உயிர் தப்பியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து, கம்பைநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் கிராமத்திலுள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (24.02.2025) பிற்பகல் சுமார் 2 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் கிராமம், பூமிசமுத்திரத்தைச் சேர்ந்த திருமலர் (வயது 38) க/பெ. விஜயகுமார், செண்பகம் (வயது 35) க/பெ.மேகநாதன் மற்றும் திருமஞ்சு (வயது 33) க/பெ. தியாகு ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications