அண்ணாமலை அசரலையே.. 3 சீட் கன்பார்ம்.. "இவருக்கு" இத்தனை தொகுதியா? பாஜக தனித்து போட்டி? அலர்ட் திமுக
சென்னை: தமிழக பாஜகவின் களப்பணிகள் வேகமெடுத்து வருகிறது. மற்றொருபுறம் கூட்டணி சம்பந்தமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.
பூவை ஜெகனின் புரட்சி பாரதம், தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியும், அதிமுகவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளதுபோல, பாஜகவுக்கு ஐஜேகே பாரிவேந்தர் மட்டும் பகிரங்கமாக தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறார்... மற்றபடி வேறு யாருமே பாஜகவுடனும், அதிமுகவுடனும் கூட்டணியை உறுதி செய்யவில்லை.

தமிழருவி மணியன்: அதேசமயம், தனக்கு நெருக்கமாக உள்ள சிறு கட்சிகளை பாஜகவில் இணைக்கும் முயற்சியில் தமிழருவி மணியன் ஈடுபடுவார் என்று தகவல்கள் பரபரத்தன.. சுருக்கமாக சொல்லப்போனால், பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியிலும், திமுக கூட்டணிக்கு செக் வைக்கும் முயற்சிலும் தமிழருவி மணியன் ஈடுபட உள்ளதாக சொன்னார்கள்.
இந்நிலையில், பாஜகவில் சீட் கன்பார்ம் என்று சொல்லப்பட்ட பாரிவேந்தர் நேற்று நாமக்கல்லில் ஒரு பேட்டி தந்துள்ளார். அப்போது, "எங்கள் கட்சி தேசியக் கொள்கை கொண்ட ஒரு கட்சியாகும். தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே உள்ளது. கடந்த 2014- ல் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தோம். உலகம் முழுவதும் இப்போது பேசப்படும் பிரதமர் மோடியை தமிழகம் அழைத்து வந்து பல்வேறு இடங்களில் பெரிய அளவில் கூட்டம் நடத்தி பேச வைத்துள்ளேன்.
பெரம்பலூர்: அன்று முதல் தேசியக் கட்சியுடன் இணைந்துதான் பயணித்து வருகிறேன். இடையில் சிறிய சறுக்கல் ஏற்பட்டது. இருந்தாலும், பாஜகவுடன் இணைந்து நல்ல தோழமைக் கட்சியாக இந்திய ஜனநாயகக் கட்சி செயல்பட்டு வருகிறது. பெரம்பலூர் தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
ஆனால், 2, 3, சீட்டுகளை ஒதுக்கீடு செய்வதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எங்களிடம் சொல்லி உள்ளார்.. அதில் எந்த தொகுதி பிடித்தமாக இருக்கிறதோ, வெற்றி வாய்ப்பு எங்கு உள்ளதோ அங்கு போட்டியிடுவேன்.. அரியலூர் - நாமக்கல் ரயில் வழித்தடத் திட்டத்தை பெற்றுத் தருவதற்கு உண்டான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வேன்..
நிதி ஒதுக்கீடு: மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதற்கு, தமிழக அரசு இணக்கமாகச் செயல்படாததே முக்கிய காரணம். 500 பேர் சென்று மத்திய அமைச்சர்களை பார்த்தாலும், உரிய நட்புத் தன்மையோடு பழகினால்தான் மத்திய அரசு அதிக அளவில் நிதியை வழங்க முன்வரும். இல்லாவிட்டால், குறிப்பிட்ட அளவில் மட்டுமே நிதியை ஒதுக்கீடு செய்யும்.
தமிழகத்திற்கு மட்டும் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளது.. பிரதமர் திறந்த மனதோடு தமிழகத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டைச் செய்கிறார் என்பதை மறுக்க முடியாது. தங்களை பெரிய எதிர்க்கட்சியாகக் காட்டிக் கொள்ள திமுக முயல்கிறது" என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார் "உதயசூரியன்" சின்னத்தில் எம்பியான பாரிவேந்தர்.
மெகா கூட்டணி: 3 சீட்டுகளை ஐஜேகேவுக்கு வழங்கப்போவதாக அண்ணாமலை சொல்லியிருக்கிறாராம்.. அப்படியானால், பாஜக இந்த தேர்தலில் தனித்து போட்டியிட போகிறதா? அதிமுகவை இனிமேல் சமாதானப்படுத்த மாட்டார்களா? அப்படியானால், அதிமுகவில் உள்ள "பாஜக ஆதரவு தலைவர்கள்" என்ன செய்வார்கள்? பாஜகவுடன் கூட்டணி வைக்க போகும் கட்சிகள் என்னென்ன? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications