நம்பர் கேமில் ஏமாந்தாரா விஜய்? பில்டப் பேச்சால் பலன் கிடைக்குமா? 85% வாக்குப்பதிவு டேட்டா உண்மை என்ன
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 85 சதவீத வாக்குப்பதிவு என்பது தனது வருகையால் ஏற்பட்ட மாற்றம் என அவர் குறிப்பிடுவது, தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு தரவுகளுடன் ஒப்பிடுகையில் முரண்படுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படும் 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு சமீபத்தில் ஒருவழியாக நிறைவடைந்தது. இந்தத் தேர்தலை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார்.

அதில், "தமிழக தேர்தல் வரலாற்றில் இது ஒரு சிகரமான நிகழ்வு" எனக் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, 85 சதவீத வாக்குப்பதிவு என்பது முன் எப்போதும் இல்லாத ஒன்று என்றும், வெளிநாடுகளில் இருந்து கூட மக்கள் வந்து வாக்களித்தது ஒரு ஜனநாயகத் திருவிழாவின் அடையாளம் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்திருந்தார். இருந்தாலும் அவரது இந்த தரவுகள் மற்றும் அதன் பின்னணியில் அவர் முன்வைக்கும் வாதங்கள் தற்போது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றன.
85 சதவீத வாக்குப்பதிவு
விஜய் தனது அறிக்கையில், 85 சதவீத வாக்குப்பதிவை ஒரு வரலாற்றுச் சாதனையாகச் சித்தரித்திருந்தாலும், கள எதார்த்தம் அதற்கு முற்றிலும் மாறாக உள்ளதாகவே தெரிகிறது.. காரணம், இந்த முறை வாக்கு சதவீதம் உயர்ந்து காணப்படுவதற்கு பின்னால் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR முறை ரீதியான சீர்திருத்தங்கள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
வாக்காளர் பட்டியலில் இருந்த லட்சக்கணக்கான போலி மற்றும் இரட்டைப் பதிவுகள் நீக்கப்பட்டதால், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. இது இயல்பாகவே பதிவான வாக்குகளின் சதவீதத்தை உயர்த்தியும் காட்டியுள்ளது. இந்த அடிப்படை தொழில்நுட்ப மாற்றத்தைப் புரிந்துகொள்ளாமல், இது தனது வருகையினால் ஏற்பட்ட எழுச்சி என்று செல்வது ஒரு மேம்போக்கான விளக்கமாகவே பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல, சென்னை மாநகரின் 9 முக்கிய தொகுதிகளின் தேர்தல் ஆணையத் தரவுகளை ஆய்வு செய்யும் போது விஜய்யின் வாதங்கள் தவிடுபொடியாகின்றன. சதவீத அடிப்படையில் உயர்வு தெரிந்தாலும், பதிவான வாக்குகளின் மொத்த எண்ணிக்கையைக் கணக்கிட்டால் அது கடந்த தேர்தல்களை விடக் குறைவாகவே உள்ளது.
மாய பிம்பம் - அனுபவ குறைபாடு
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு இயல்பான நிகழ்வுதான்.. இத்தகைய சூழலில், முறையான தரவு ஆய்வின்றி ஏதோ ஒரு மாய பிம்பத்தை உருவாக்க முயல்வது அவரது அரசியல் அனுபவக் குறைபாட்டையே அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
ஆனாலும், விஜய்யின் இந்த அறிக்கையில் ஒருவிதமான குறியீட்டுத் தன்மையிலான உற்சாகம் இருப்பதைச் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். புதிய வாக்காளர்களையும், இளைஞர்களையும் வாக்குச்சாவடிக்கு வரவழைப்பதில் தவெக தொண்டர்களின் செயல்பாடுகள் ஓரளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் ஒரு புதிய கட்சியின் தலைவராகத் தனது தொண்டர்களைத் தக்கவைத்துக் கொள்ள அவர் இத்தகைய ஒரு மிகைப்படுத்தப்பட்ட நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
பொய்யான பிம்பங்கள்
அதுக்காக, வெறும் உற்சாகம் மட்டுமே அரசியலாகி விடாது என்பதையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. தரவுகளை திரித்து தனது கணக்கில் எழுதிக்கொள்ளும் இந்தத் தந்திரம் மக்கள் மத்தியில் எடுபடாது என்பதை விஜய் உணர வேண்டும்..
வெறுமனே, கலர் கலராக, உணர்ச்சிகரமான, பொய்யான பிம்பங்களை உருவாக்குவதை விடுத்து, புள்ளிவிவரங்களின் அடிப்படையில் எதார்த்தமான அரசியலை முன்னெடுக்கத் தவறினால், அது கேலிக்குரிய ஒன்றாகவே முடியும்... தரவுகளை மறைத்துத் தன்னைத் தானே முதன்மைப்படுத்திக் கொள்ளும் இத்தகைய போக்கு, ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைவருக்கு அழகல்ல என்பதையும் நாம் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது...!!!












Click it and Unblock the Notifications