வைரலாகும் ‘ரமணா’ படக் காட்சி!.. அன்று நடந்தது என்ன? இயக்குநர் சொன்ன உண்மை
சென்னை: 'ரமணா' படத்தில் இடம்பெற்ற மிகப் பிரபலமான வசனத்தை ஒரே டேக்கில் விஜயகாந்த் பேசி முடித்தார் என்று அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்திருக்கிறார்
விஜயகாந்த் திரை வாழ்க்கையில் அவரை அதிகம் தூக்கி நிறுத்திய திரைப்படம் 'ரமணா'. மருத்துவ உலகத்தில் நடக்கும் மோசடிகளை வெட்டவெளியில் போட்டு உடைத்த திரைப்படம்.

விஜயகாந்த் மறைந்துவிட்டார் எனச் செய்தி வெளியானது முதல் சமூக வலைதளங்களில் அவரது 'ரமணா' படத்தின் மருத்துவமனைக் காட்சியைப் பலரும் பகிர்ந்து கருத்து கூறி வருகின்றனர்.
'ரமணா'வில் செத்த பிணத்திற்கு டாக்டர்கள் வைத்தியம் செய்யும் காட்சியை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. ஆகவேதான் இத்தனை ஆண்டுகள் கழித்து அந்தக் காட்சி அதிகம் பேரைக் கவர்ந்திருக்கிறது.
பொதுவாக விஜயகாந்த் தனது படங்களில் மூச்சு முட்ட வசனங்களைப் பேசிக் கொண்டே இருப்பார். ஆனால், 'ரமணா' வில் அவர் அமைதிப் புயலாக மாறி நடித்திருந்தார். அவர் அதிகம் பேசாததால் படம் பெரிதும் பேசப்பட்டது.

அப்படித்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அக்காட்சிகள் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
"நான் 2வது படம் 'ரமணா' எடுத்தபோது ரொம்ப ரொம்ப சின்னப் பையன். அப்போது கேப்டன் மிகப் பெரிய ஸ்டார். அப்போது எனக்கு அவரிடம் செல்லவே தயக்கம் இருந்தது. பதற்றமாக நான் இருக்கிறேன் என்பதை அவர் புரிந்துகொண்டார்.

அவரே என்னை அழைத்து சகஜ நிலைக்கு மாற்ற முயற்சி செய்தார். அவர் அப்படிச் செய்ததால் 2 நாள்களில் நான் சகஜ நிலைக்கு வந்தேன். 3-வது நாளிலிருந்துதான் படப்பிடிப்பு நன்றாக டேக் ஆப் ஆனது.
அந்தப் படத்தைப் பொறுத்தவரை நான் என்னவெல்லாம் சொன்னேனோ அதை எல்லாம் செய்தார். எந்த ஒரு வசனத்தையும் அவர் மாற்றவில்லை. ஏன் அப்படிச் செய்கிறாய்? ஏன் இப்படி எடுக்கிறாய் என்று ஒரு வார்த்தை அவர் கேட்டது இல்லை.
'ரமணா' படத்தில் அதிகம் விஜயகாந்த் பேச மாட்டார். இறுதியாகப் பெரிய வசனத்தைப் பேசுவார். பல புள்ளிவிவரங்களைச் சொல்லும் காட்சி. அந்தக் காட்சியை 2 டேக்கில் எடுத்தோம். ஒரு டேக்கில் கேமரா சரியாக வைக்கவில்லை. ஆகவே அடுத்த டேக் போனோம்.

அந்த முழு வசனத்தையும் அப்படியே ஒரே டேக்கில் பேசினார். பேசியது முக்கியம் இல்லை. அந்த எண்களுடன் அப்படியே சரியாகச் சொன்னார். நாங்க ஆச்சரியமாக அதைப் பார்த்தோம்.
அந்தப் படம் எடுத்த காலத்தில் எனக்குக் கல்யாணம் ஆகவில்லை. அதைத் தெரிந்துகொண்டு, 'ஏன் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறாய்? லேட் மேரேஜ் செய்து கொள்ளாதே. நான் கூட லேட் மேரேஜ்தான் செய்தேன். அதற்காகத்தான் சொல்கிறேன், சீக்கிரம் கல்யாணம் செய்' என்று ஒரு அண்ணனைப் போல அட்வைஸ் சொன்னார்.
உடனே நான் விளையாட்டாக 'நீங்க என் கல்யாணத்திற்கு வந்து நடத்தித் தருவதாக இருந்தால் செய்து கொள்கிறேன்' என்றேன்.

உடனே வருகிறேன் என்றார். நான் அப்போது விடவில்லை. 'சென்னையில் இல்லை. என் சொந்த ஊர் கள்ளக்குறிச்சியில் செய்யப் போகிறேன். வருவீர்களா?' என்றேன். 'அதனால் என்ன நான் கள்ளக்குறிச்சிக்கே வருகிறேன்' என்றார்.
அவர் சொன்னார். ஆனால், கல்யாணம் நடக்கும்போது வருவாரா என்ற சந்தேகம் கடைசி வரை எனக்குள் இருந்தது. ஆனால், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு எனக்காக அவ்வளவு தூரம் பயணித்து வந்து திருமணத்தை நடத்திக் கொடுத்தார்.
அப்படித்தான் அவர் இயல்பாகவே எல்லோர் மீதும் அன்பு காட்டுவார். படப்பிடிப்பில் பலர் இயக்குநர் மேலும் சிலர் என்ற சின்ன வட்டத்துக்குள்தான் பழகுவார்கள். பொதுவாகப் பல ஹீரோக்கள் அப்படித்தான்.
ஆனால், ஸ்டெண்ட் மாஸ்டர்கள் கூட உட்கார்ந்து மணிக்கணக்காகப் பேசிவார். அவர்கள் சண்டையிடும்போது அடிப்பட்டு விடக்கூடாது எனக் கவனமாக இருப்பார். நடிகர் என்பதைத்தாண்டி அவர் மிகப் பெரிய மனிதர். சிறந்த மனிதர்.
"கேப்டனை ஒரு கமர்ஷியல் ஹீரோ என்ற எல்லையோடு மட்டும் சுருக்கிவிட முடியாது. இன்றைய தலைமுறைக்குத் தெரியாத விசயம் சினிமாவில் நிறையப் புதுமைகளைச் செய்தவர்.

ஒரு பக்கம் கிராமத்துப் படங்கள் நடித்துக் கொண்டிருந்தபோது இன்னொரு பக்கம் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த இயக்குநர்களுடன் சேர்ந்து படம் பண்ணிக் கொண்டிருந்தார். அது முற்றாக வேறு மாதிரி இருக்கும்.
போலீஸ் ஸ்டோரி, ஆர்மி ஸ்டோரி என்று இந்தப் பக்கம் நடித்துக் கொண்டிருப்பார். இரண்டுமே வேறு வேறு உலகம். அதைச் சரியாக பேலன்ஸ் செய்தார் கேப்டன்.
அடையாறு ஃபிலிம் இன்ஸ்டிடியூட் பெயர் எடுக்கவும் அதிலிருந்து உருவான இயக்குநர்கள் படம் எடுப்பதற்கு உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த்.
'புலன் விசாரணை', 'ஊழை விழிகள்' போன்ற படங்களில் பாதி படத்திற்கு மேல்தான் ஹீரோ எண்ட்ரியே இருக்கும். அப்படியான வித்தியாசமான கதைகள் கொண்ட படங்கள் அவை" என்கிறார்












Click it and Unblock the Notifications