2 வாரத்தில் தமிழக பட்ஜெட்.. மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 உயர்வு? இலவச பேருந்து பயண அறிவிப்பு?
சென்னை: விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிருக்கான முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 உயர்வு?
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பதால், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, தற்போது வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகையை ரூ.1,000 ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தும் அறிவிப்பு மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிருக்கு முழுமையான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஆகியவை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நிதி அமைச்சர் என். மேரி வில்சன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான விரிவான செயல் திட்டம் மற்றும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார் என்றும் அவர் கூறினார்.
தமிழக போக்குவரத்துத் துறையின் கீழ் தற்போது மொத்தம் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் ஒட்டுமொத்தமாக 21,527 பேருந்துகள் மாநிலம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக நடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், "பெண்களுக்கு அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமில்லா இலவச பயணத் திட்டம் (வெற்றிப் பயணம் திட்டம்) செயல்படுத்தப்படும்" என்ற முக்கிய வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில், விஜய் கடந்த 16ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அனைத்து வகையான பேருந்துகளிலும் (சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் மற்றும் தொலைதூரப் பேருந்துகள் உட்பட) இந்த திட்டத்தை எவ்வாறு திறம்பட செயல்படுத்துவது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தை அடுத்தே, தற்போது ஒவ்வொரு போக்குவரத்து கழகமும் தங்களுக்கு உட்பட்ட பேருந்துகள் மற்றும் நிதித் தேவைகள் குறித்த தனித்தனி அறிக்கைகளை தயாரிக்கும் பணிகளில் களமிறங்கியுள்ளன.
ஆகஸ்ட் 5-ல் தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடர்
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஜூலை 21 செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த சட்டசபை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த விவரங்களை வெளியிட்டுப் பேசினார்.
2026-27 நிதியாண்டிற்கான முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் என். மேரி வில்சன் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 10 மணிக்குச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்வார். அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வார்."
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, ஆகஸ்ட் 5-ஆம் தேதியே சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் கூடி, பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும். மேலும், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் உட்படச் சட்டமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விவாதங்களில் முழுமையாகப் பங்கேற்றுத் தங்களது கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும், ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் அமைதியான முறையில் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்றும் சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.


Click it and Unblock the Notifications
