இந்தியில் வந்த கேள்வி.. ஒரு நொடி யோசித்த மணிரத்னம்.. அடுத்து கொடுத்த "தக் லைப்" பதில்.! டிரெண்டிங்
சென்னை: கமல் ஹாசன் நடிப்பில் விரைவில் தக் லைப் படம் வெளியாக உள்ளது. இதற்கிடையே படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் மணிரத்னத்திடம் இந்தியில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தி புரியாததால் குழம்பிய மணிரத்னம், அதற்குக் கொடுத்த பதில் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைப். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி பொதுமக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படம் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது.

தக் லைப்
இப்போது இப்படத்திற்குத் தேவையான புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் மிகப் பெரியளவில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி மும்பையில் நேற்று புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அப்போது இளைஞர் ஒருவர் இயக்குநர் மணிரத்னத்திடம் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
இந்தியில் வந்த கேள்வி
இந்தியில் மிகவும் விரிவான கேள்வியை அவர் எழுப்பினார். கேள்வி கேட்கும்போது அவரையே உற்றுக் கவனித்த மணிரத்னம், கேள்வி கேட்டு முடித்தவுடன் அருகே இருந்த கமல்ஹாசனிடம் ஏதோ கேட்டார்.
இதையடுத்து அந்த நபர் கேள்வியை மீண்டும் ஆங்கிலத்தில் கேட்டார். அதாவது தக் லைப் படம் தொடர்பாக கமல்ஹாசனை முதலில் சந்தித்த போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதே அந்த கேள்வி. இருப்பினும், முதலில் இந்தியில் அந்த கேள்வியைக் கேட்டதால் மணிரத்னத்திற்கு அது புரியவில்லை. இதன் காரணமாகவே அவர் கமலிடம் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டார். அதன் பிறகே அந்த நபர் ஆங்கிலத்தில் தனது கேள்வியைச் சுருக்கமாகக் கேட்டார்.
மணிரத்னம் தக் லைப் பதில்
அப்போது அந்த நபருக்கு மணிரத்னம், "பொதுவாக நான் இந்தியில் பேசுவதைக் கவனிக்கும் போது சப் டைட்டில் எங்கே இருக்கிறது என்பதைப் பார்ப்பேன். இந்த முறை சப் டைட்டில் எதுவும் இல்லாததால் கமல்ஹாசனிடம் கேட்க வேண்டி இருந்தது" என்றார். மணிரத்னம் இப்படியொரு பதிலைத் தருவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த பதிலைக் கேட்டவுடன் கேள்வி எழுப்பிய அந்த நபர் உட்பட அங்கிருந்த அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து பேசிய இயக்குநர் மணிரத்னம், "எப்படி உணர்ந்தேன் எனக் கேட்கிறீர்கள். இந்த கதை அப்படி அமையவில்லை. நானும் கமலும் நீண்ட காலமாகவே இந்த கதை குறித்தும் பேசி வந்தோம். இறுதியில் இந்த கதையை எடுக்கலாம் என முடிவு செய்தோம். இருவரும் ஒப்புக்கொண்டு அதன் பிறகே டெவலப் செய்தோம்" என்றார்.
இந்தியில் கேள்வி கேட்ட அந்த நபர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அதையும் மேடையிலேயே குறிப்பிட்ட அவர், கடைசியில் மட்டும் தனது தாய் மொழியான ராஜஸ்தானி மொழியில் நன்றி வெல்கம் என்பதை மட்டும் குறிப்பிட்டார்.
இந்தி தெரியாது
இயக்குநர் மணிரத்னம் தனது கல்லூரி படிப்பை மும்பையில் தான் படித்திருந்தார். இருப்பினும், அவர் இந்தியை கற்கவில்லையாம். இதை கமல்ஹாசன் முன்பு ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். இதற்கு முன்பு வட இந்தியாவில் பட புரமோஷன்களுக்கு செல்லும்போதும் கூட இந்தியில் கேள்வி எழுப்பினால் அருகே உள்ளவர்களிடம் கேள்வி என்னவென்று கேட்டு அதற்கு ஆங்கிலத்தில் தான் பதிலளிப்பார். பொன்னியின் செல்வன் படத்தின்போது ஐஸ்வர்யா ராய் தான் பெரும்பாலும் இதுபோல மணிரத்தினத்திற்கு மொழி பெயர்த்திருந்தார். இப்போது தக் லைப் படத்தில் அதைக் கமல் செய்கிறார்.












Click it and Unblock the Notifications