ஆம்ஸ்ட்ராங்க் கொலை..ஒன்று கூடும் உறவுகள்! பா.ரஞ்சித் முக்கிய அறிவிப்பு..பகுஜன் சமாஜ் தலைவராகிறாரா?
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங்-ன் படுகொலைக்கு நீதி வேண்டி வரும் சனிக்கிழமை 20 ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெறும் என இயக்குனர் பா.ரஞ்சித் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்நிலையில் முதன்முதலாக சினிமா, கலை அல்லாத நிகழ்வை பா.ரஞ்சித் ஒருங்கிணைக்கிறார். இது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வேறு, சரணடைந்திருப்பவர்கள் வேறு என தமிழக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது. இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி ஆளுநரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி வரும் சனிக்கிழமை 20 ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெறும் என இயக்குனர் பா.ரஞ்சித் அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
நாட்டையே உலுக்கிய இக்கொடூர நிகழ்வு தனிப்பட்ட முறையில் நம் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பாகும். தலித்துகள், சமூக அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை அடைய இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதில் அவர்கள் சந்தித்த இழப்புகள் எண்ணிலடங்கா! இதையெல்லாம் மீறி இயக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் 'அம்பேத்கரியம்' என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைந்த தலைவர்களே நம் பலம். நூறு வருடத்திற்கும் மேலான தலித் அரசியல் வரலாற்றில் ஒரு தலைவரின் இருப்பே கேள்விக் குறியாகியிருப்பது சுலபமாகக் கடந்து போகக் கூடிய நிகழ்வல்ல.
சமத்துவத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் என்கிற ஆளுமையை வீழ்த்திவிட்டால் அவர்தம் நம்பிய அரசியலும் வீழும் என்கிற சிந்தனை உதிப்பதற்கு முன்பே அதைப் பொய்ப்பிக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. பாபாசாகேப் அம்பேத்கரை நெஞ்சிலேந்தி, இவ்விழப்பு ஒரு குடும்பத்திற்கோ, இயக்கத்திற்கோ நேர்ந்ததாகக் கருதாமல் நம் ஒவ்வொருவருக்கும், சமூகத்திற்கும் நேர்ந்த இழப்பு எனப் பறை சாற்றுவோம். சாதி. மதம் மற்றும் இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு, தான் நம்பிய தத்துவத்தின்படி வாழ்ந்த சமூக வீரர் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் செயற்பாடுகளை நினைவிலேந்தி சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே கூடி, இராஜரத்தினம் அரங்கம் வரை ஊர்வலமாகச் சென்று அங்கு நடைபெறும் நினைவேந்தல் கூட்டத்தில் பெருந்திரளாக அணியமாகி, கட்சிப் பாகுபாடு இல்லாமல் அணிதிரள்வோம். வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகளைத் தண்டித்திடவும், தலித் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் குரல் கொடுப்போம்.
அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொள்ளும் எழுச்சிமிகு பேரணியில் ஆயிரமாயிரமாய் இணைவோம், வாருங்கள்!" என கூறப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளையுமே பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையமே ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் போலவே அம்பேத்கர் கொள்கை பிடிப்பும், தெளிந்த அரசியல் பார்வையும் கொண்ட பா.ரஞ்சித் பகுஜன் சமாஜ் கட்சியை வழிநடத்த வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மாணவர்களும் பகுஜன் சமாஜ் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகூறி வருகின்றனர். இந்நிலையில் முதன்முதலாக சினிமா, கலை அல்லாத நிகழ்வை பா.ரஞ்சித் ஒருங்கிணைக்கிறார். இது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பா.ரஞ்சித் பகுஜன் சமாஜ் தலைவராக அரசியல் பயணத்தை தொடர்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications