‘பராசக்தி’ போல அரசியல் பேசணும்! கலைஞர் ஸ்டைல் சினிமா.. வெற்றிமாறன் & தங்கர் பச்சான் விளக்கம்
சென்னை: 'கலைஞர்100' விழாவைத் தமிழ்நாடு அரசு தடபுடலாகக் கொண்டாடி வருகிறது. அதைத்தாண்டி திமுகவினர் தங்களின் தலைவரான மு.கருணாநிதியின் நூற்றாண்டை விதவிதமான கோணங்களில் கொண்டாடி வருகிறது.
அப்படி ஒரு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் திரைத்துறையில் கலைஞரின் சாதனைகள் பற்றி பலரும் தங்களின் பார்வையைப் பகிர்ந்துகொண்டனர்.

அந்த விழாவில் 'பராசக்தி'யைப் போல அரசியலை வெளிப்படையாகப் பேசும் திரைப்படம் இன்றைக்கும் ஏன் அவசியம் தேவைப்படுகிறது? என்பதைப் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் விரிவாகப் பேசினார்.
அப்போது அவர், "அன்றைய இளைஞர்களால் பெரும் கனவுகளுடன் எடுக்கப்பட்ட படம் 'பராசக்தி'. அன்றைக்கு அவர்கள் கையில் வசதி இல்லை. அதிகாரம் இல்லை. ஆட்சி இல்லை. ஆனால், லட்சியம் மட்டுமே இருந்த இளைஞர்களால் எடுக்கப்பட்ட படம் அது. அந்தப் படம் தமிழ்நாட்டில் இரண்டு மட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
இன்றைக்குவரைத் தமிழ்நாட்டில் மதத்தை வைத்து அல்லது சாதியை வைத்து அல்லது வேறு எந்தப் பிரிவினையைச் சொல்லி அரசியல் செய்ய முடியாமல் இருப்பதற்கு அந்தப் படம் ஒரு காரணியாக அமைந்திருக்கிறது.

அன்றைய இளைஞர்கள் தொடங்கி இன்றைய இளைஞர்கள் வரை அதற்கான அடுத்த கட்ட நகர்வைத் தமிழ் சினிமாவில் நகர்த்திக் கொண்டே வருகிறார்கள்.
அடுத்து சமுகத்துடன் அரசியல் உரையாடலை ஏற்படுத்தக் கூடிய படங்கள், வணிக ரீதியாகவும் வெற்றிப் படங்களாக மாறக்கூடிய சூழலை 'பராசக்தி'தான் முதன்முதலாக ஏற்படுத்திக் கொடுத்தது.

நான் உரையாடக் கூடிய வேறு மொழி இயக்குநர்கள் என்னிடம், 'இந்த மாதிரியான அரசியல் பேசும் படங்களை எப்படி வெற்றிப் படங்களாக மாற்றுகிறார்கள்? அது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது' என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

திராவிட சினிமா என்பது ஒரு இயக்கமாக மாறி, பின் ஆட்சி அதிகாரத்திற்குள் அவர்கள் வந்ததும் இடையில் சில காலங்கள் அதைப்போன்ற சினிமாக்களுக்கு தேவை என்பது இல்லை என்ற சூழல் நிலவியது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் சினிமாவின் மூலம் அரசியலை விவாதிப்பது மிகக் கட்டாயமாக இருக்கிறது.
இன்றைக்குக் கதையின் மூலமாக நிறையப் பொய்கள் கட்டமைக்கப்படுகிறது. நாம் இன்றைக்கு ஒன்றைச் சொன்னால், அதை எப்படி எல்லாம் மாற்றிச் சொல்வதற்கு ஒரு கதை வைத்திருக்கிறார்கள். ஊடகங்கள் வைத்திருக்கிறார்கள்.
ஆகவே, நாம் கதைகள் சொல்ல வேண்டும். நம் கதைகளைச் சொல்ல வேண்டும். அதற்கு முக்கியமான சாதனம் சினிமா. அடுத்ததாக ஊடகம். அதன் மூலமாகத்தான் நாம் விவாதங்களை முன்னெடுக்க வேண்டும். இதற்கு எல்லாம் தொடக்கம் 'பராசக்தி'தான். நாம் அனைத்தையும் கற்றுக் கொண்டது அங்கிருந்துதான்" என்றார்

அடுத்து ஒளி ஓவியர் தங்கர் பச்சான், "அடிப்படையில் நான் எம்.ஜி.ஆர் பற்றாளன். அவரது படங்களில் வரும் கொள்கைகள் மூலமாக ஈர்க்கப்பட்டவன். மற்றபடி எனக்கு எம்.ஜி.ஆரை நேரடியாக எல்லாம் தெரியாது. அப்படி இருந்த நான் கலைஞர் பற்றாளனாக மாறியதுதான் முக்கியமானது.
கடந்த 1999 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். என்னுடைய 'ஒன்பது ரூபாய் நோட்டு' நாவல் சிறந்த நாவலாகத் தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்போதுதான் நான் கலைஞரை நேரில் சந்தித்தேன்.
'உங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே வரவழைத்தேன்' என்று கலைஞர் சொன்னார். அது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அப்புறம், 'இந்தப் பெயரை எப்படி வைத்தீர்கள்? எப்படி உங்களுக்குத் தோன்றியது?' என்று கேட்டார்.

நான் அதற்கு, 'நீங்கள் படிக்க வேண்டும் அய்யா?' என்றேன். அதற்கு அவர், 'நீங்கள் சொல்லித்தான் நாங்கள் படிக்க வேண்டுமா? படித்துவிட்டுத்தான் இதற்கு முதல் பரிசு தருகிறோம்' என்று சொன்னார்.
எந்த முதலமைச்சர் நாவலைப் படிப்பார்கள் சொல்லுங்கள்? அதற்கு நேரம் இருக்குமா? என் நாவல் 346 பக்கங்கள். ஒரு முதலமைச்சர் பதவியில் உட்கார்ந்து கொண்டு அந்த நாவலை முழுமையாகப் படித்திருந்தார் கலைஞர். அந்த நாவலைப் பற்றிப் பேசினார். அதிலேயே நான் விழுந்துவிட்டேன். நாவலைப் பற்றி விரிவாக ஒவ்வொன்றாகக் கேட்டார். நான் ஆச்சரியப்பட்டுப் போனேன்.
அடுத்து 'கலைமாமணி' விருதுக்கு அழைக்கப்பட்டேன். பிறகு 'காதல் கோட்டை'க்கு ஒரு விருது. அதன்பிறகு சிறந்த ஒளிப்பதிவாளருக்கு ஒரு விருது. மீண்டும் சிறந்த பதிப்பாளருக்கு விருது.
இப்படிக் கிட்டத்தட்ட 9 விருதுகளைக் கலைஞர் கையால் வாங்கினேன். அதுவும் அவருடைய கையால் மட்டும்தான் வாங்கி இருக்கிறேன். அதை மீண்டும் அழுத்திச் சொல்கிறேன்.

எனது 'அழகி' படம் கண்டுகொள்ளவில்லை. 2002இல் வந்தது 'சொல்ல மறந்த கதை' கண்டுகொள்ளப்படவில்லை. அப்போது யார் ஆட்சி என்பதை அனைவரும் அறிவர்.
ஆனால், கலைஞர் என்னை தங்கர் பச்சான் என்பதற்காக அங்கீகரிக்கவில்லை. என் படைப்புகளைப் பார்த்துவிட்டு, அதற்காக என்னைக் கௌரவித்தார். அப்படிப்பட்ட பார்வை இன்றைக்கு இல்லை.
எனது 'பள்ளிக்கூடம்' படத்தைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். அவருக்காகவே தனி காட்சி போட்டோம். அவர் மிகக் கவனமாக அதைப் பார்த்தார். அன்று ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார். 'எத்தனையோ முறை முதலமைச்சராக இருந்திருக்கிறேன். எத்தனையோ உதவிகளைச் செய்திருக்கிறேன். ஆனால், நான் படித்த பள்ளிக்கூடத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை. அதை நீ உணர்த்திவிட்டாய்' என்று சொன்னார். அதன்பிறகு அவர் தனது கிராமத்திற்குச் சென்று தான் படித்த பள்ளிக்கூடத்தைப் பார்த்துவிட்டு வந்தார்.

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் 'பள்ளிக்கூடம்' படத்தைத் திரையிட்டுக் காட்ட உத்தரவிட்டார்.
இப்படி எத்தனையோ நினைவுகள். நாம் எல்லோரும் ஊனமுற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தோம். கலைஞர்தான் அந்த வார்த்தையை மாற்றி 'மாற்றுத்திறனாளி' என்று அழைக்க உத்தரவு போட்டார்.
அதைப் போன்று திருநங்கைகள். அவர்கள் மீதான பார்வையை அவர்தான் மாற்றினார். ஒருவரை ரிக்ஷாவில் உட்கார வைத்து இன்னொரு மனிதன் இழுப்பதைக் கண்டு வேதனைப்பட்ட அவர், கை ரிக்ஷாவையே ஒழித்தார்.

இதைப்பற்றி எல்லாம் எனக்கு இப்போதுதான் தெரிகிறது. அவருடன் இருந்த காலத்தில் தெரியவில்லை. எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. நான் இதுவரை யாருடைய வாழ்க்கையையும் படமாக்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை.
கலைஞரின் வாழ்க்கையை நிச்சயமாகத் திரைப்படமாக எடுக்க வேண்டும். இது என்னுடைய கோரிக்கை. அதை அரசு செய்யக் கூடாது. நல்ல இயக்குநர்கள் செய்ய முன்வர வேண்டும்" என்று மனப்பூர்வமாகச் சொன்னார்.
-
சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில் -
கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications