திமுக கூட்டணியில் ஓபிஎஸ், தேமுதிக.. திருமாவளவன் கொடுத்த மெசேஜ்
சென்னை: 2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சி தலைவர்களின் சுற்றுப்பயணங்கள், வீடு தோறும் திண்ணை பிரச்சாரங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், பொது கூட்டங்கள் என்று இப்போதே தொடங்கிவிட்டன. திமுக கூட்டணியில் ஏற்கனவே பல கட்சிகள் உள்ள நிலையில், கடந்த வாரம் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தனர். இதையடுத்து அவர்களும் திமுக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் கூறிய பதில் கவனம் ஈர்த்துள்ளது.
தமிழ்நாடு தேர்தல் களத்தில் இப்போதிருந்தே தினசரி அதிரடி மாற்றங்கள், திருப்பங்கள் ஏற்பட தொடங்கிவிட்டன. கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கு என்று வியூகம் வகுத்து களத்தில் இறங்கிவிட்டனர். திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமாவளவன் க்ரீன் சிக்னல்
பாமக, தேமுதிக, ஓபிஎஸ் உள்ளிட்டோர் எடுக்கப் போகும் முடிவுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார், "திமுக கூட்டணிக்கு தேமுதிக, ஓபிஎஸ் வந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே. கூட்டணியில் எந்தக் கட்சிகள் இடம்பெறும் என்பதை திமுக தலைமை தான் முடிவு செய்யும். நாட்டை பாதுகாக்க, மக்களை பாதுகாக்க, சனாதன சக்திகளிடம் இருந்து அரசியல் சட்டத்தை பாதுகாக்க மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வலிமை பெற வேண்டிய தேவை உள்ளது.
முதலமைச்சர் உடல் நலனை விசாரிப்பதை எல்லாம் அரசியல் முக்கியத்துவமான சந்திப்பாக கருத முடியாது. ஆனால் திமுக கூட்டணியில் இணைய அரசியில் கட்சிகள் விரும்புகிறார்கள். எங்கள் கூட்டணி பலவீனமாக இருக்கிறது என்றெல்லாம் கூறி நாங்கள் யாரையும் அழைக்கவில்லை. அதேநேரத்தில் கூட்டணி நலனுக்காக ஒத்துழைப்பு கொடுப்போம்.
பாஜக தேர்தல் மோசடி
சாதிய மதவாத அரசியல் கட்சிகள் தவிர மற்ற அனைவருமே எங்கள் தோழமை கட்சிகள் தான். அவர்களுடன் நாங்கள் பயணிப்போம். அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியில் வந்ததே மகிழ்ச்சி தான். பாஜக மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஏராளமான மோசடிகளை செய்வதாக புகார் உள்ளது. தற்போது வாக்காளர் பட்டியல் திருத்த மோசடியுடன், குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடவடிக்கை இல்லை. தொடர்ந்து தேர்தல் தில்லு முல்லு நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டு வருகிறது. நெல்லை கவின் ஆணவ கொலை வழக்கில் வேறு சிலரும் இருக்கலாம் என்று நான் யூகிக்கிறேன். இதைத்தான் கவினும் தந்தையும் கூறுகிறார். தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி கூட்டம்
ஆணவ கொலைகள் தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். ஆணவ கொலையை தடுக்க வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி விசிக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படவுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகப்படியாக வருவதில் மகிழ்ச்சி. ஆனாலும் தேர்தல் நேரத்தில் மக்கள் முடிவு செய்கிறார்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும்." என்றார்.












Click it and Unblock the Notifications