செந்தில் பாலாஜிக்கு ‘மேஜர்’ பொறுப்பு.. கொங்கு மண்டல கணக்கு.. அடித்து ஆடும் ஸ்டாலின்!
சென்னை: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக தலைவர் ஸ்டாலின், 7 மண்டல பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கொங்கு மண்டலத்தை செந்தில் பாலாஜியிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது.

திமுகவில் பவர்
2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பவர்ஃபுல் இலாகா வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டதால் சிறைக்கு செல்ல நேரிட்டது. இதன் காரணமாக அமைச்சர் பொறுப்பை இழந்தார்.
இதனையடுத்து, சிறையில் இருந்து ஜாமீன் பெற்று வந்த செந்தில் பாலாஜிkக்கு அடுத்த நாளே அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் மீண்டும் அமைச்சர் பொறுப்பை செந்தில் பாலாஜி இழந்தார். மேலும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவியும் முத்துசாமிக்கு வழங்கப்பட்டது.
மண்டல பொறுப்பாளர்கள்
இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது திமுக. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். திமுகவில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க கட்சி அளவில் 7 மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களையும் நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள் உட்பட
அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அர.சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக துணை பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் 7 மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கே.என்.நேருவுக்கு திருச்சி உள்பட டெல்டா மாவட்டங்களும், அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சேலம், தருமபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள், அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை தேனி உள்ளிட்ட மாவட்டங்கள் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.
செந்தில் பாலாஜி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பில் கோவை, நீலகிரி, கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், அமைச்சர் அர.சக்கரபாணிக்கு கிருஷ்ணகிரி, திண்டுக்கல் திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் ஒதுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவுக்கு சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்கள், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழிக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமாரி மாவட்டங்கள் என 7 மண்டலங்களாக பிரித்து மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பொறுப்பு
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தொடர வேண்டும் என்பதற்காக அண்மையில் அமைச்சரவையில் இருந்து அவர் விலகிய நிலையில், கரூர் மாவட்ட செயலாளராக பொறுப்பில் தொடர்ந்து வருகிறார். இந்தச் சூழலில் அவரை கொங்கு மண்டல பொறுப்பாளராக நியமிக்க ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கொங்கு மண்டலத்தை திமுக கோட்டை என நிரூபிக்க செந்தில் பாலாஜிக்கு இந்தப் பொறுப்பு அவசியம் என முதல்வர் கருதுகிறாராம்.












Click it and Unblock the Notifications