ஒரு காலத்துல என்ன பேச்சு பேசுனீங்க.. பிரதமர் மோடி பேசிய வீடியோவை பகிர்ந்த திமுக எம்.பி கனிமொழி!
சென்னை: பிரதமர் மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போது நிதிப்பகிர்வு பற்றி மத்திய அரசை விமர்சித்து ஆவேசமாகப் பேசிய காணொளியை பகிர்ந்துள்ளார் திமுக எம்.பி கனிமொழி.
மாநிலங்களுக்கு நிதி பகிர்வு விவகாரத்தில் மத்திய அரசின் மீது பாஜக ஆளாத ஆளும் முதலமைச்சர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மத்திய அரசின் நிதி பகிர்வை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடி போட்ட ட்வீட் தற்போது வைரல் ஆகி வருகிறது.

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், தென் மாநிலங்களுக்கு பகிரப்படும் நிதியின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதிகமான நிதி வட மாநிலங்களுக்கு தரப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குறிப்பாக, பாஜக ஆளும் வட மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படுவதாகவும் விமர்சிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கர்நாடகாவுக்கு மத்திய பாஜக அரசு, நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டுவதாகவும், கர்நாடகா ஒரு ரூபாய் வரியாக கொடுத்தால் அதில் வெறும் 13 பைசா மட்டுமே மத்திய அரசு தருவதாக கூறி கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் இணைந்து டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் நிதி பகிர்வுக்கு எதிராக கேரள அரசும் எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்று, கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்திப் பேசினர்.
மேலும், திமுகவும், டெல்லியில் கருப்புச் சட்டை அணிந்து போராட்டத்தை நடத்தியது. கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து, வெள்ள நிவாரணத்திற்கு இதுவரை ஒரு பைசா கூட வழங்காத மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் கறுப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது இன்றைய பிரதமர் மோடி, மத்திய அரசின் வரிப்பகிர்வை கண்டித்து ஆவேசமாகப் பேசிய காணொளியை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். "Once upon a time A CM now PM" என்ற கேப்ஷனோடு வீடியோவை பதிவிட்டுள்ளார் கனிமொழி.
Once upon a time A CM now PM#ModiEvolution pic.twitter.com/rFSXhMf63Y
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 9, 2024
அதில் பேசும் மோடி, "ஒவ்வொரு ஆண்டும் குஜராத் மாநிலம், மத்திய அரசுக்கு ரூ. 60,000 கோடியை வரியாக கொடுக்கிறது. அதற்கு ஈடாக மத்திய அரசு என்ன திரும்பத் தருகிறது? 8,000 கோடி, பத்தாயிரம் கோடி. நாங்கள் திருப்பிக் கொடுக்கிறோம், போதுமான நிதியை திருப்பிக் கொடுக்கிறோம் என்கிறது மத்திய அரசு. நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா? உங்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டுமா?" என ஆவேசமாகப் பேசுகிறார்.
மேலும், பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது பதிவிட்ட ட்வீட்களும் தற்போது பகிரப்பட்டு வருகின்றன. கடந்த 2012ஆம் ஆண்டு மோடி பதிவிட்ட ட்விட்களில், "குஜராத் மக்கள் 60,000 கோடியை அனுப்புகிறார்கள், அதற்கு ஈடாக என்ன திரும்ப வருகிறது? குஜராத் என்ன பிச்சைக்காரர்கள் மாநிலமா? நாங்கள் பிச்சைக்காரர்களா?, டெல்லியின் தயவில் வாழ்கிறோமா? பிரதமரின் மொழி அவர் வகிக்கும் பதவிக்கு உகந்தது அல்ல" என பதிவிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications