பெரியார், அண்ணா, காமராஜர் சாலைகள் பெயர் மாற்றம்.. தலைமைச் செயலாளரிடம், தி.மு.க எம்.பி.க்கள் புகார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈ.வே. ரா பெரியார் சாலை, காமராஜர் சாலை , அண்ணா சாலை ஆகிய பெயர்களை மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க எம்.பி.க்கள் தலைமைச் செயலாளரை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளனர்.

சென்னையில் உள்ள பிரதான சாலைகளான ஈ.வே ரா பெரியார் சாலை, காமராஜர் சாலை , அண்ணா சாலை ஆகிய மூன்று சாலைகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக தமிழக அரசின் இணையத்தளத்திலும் தகவல் வெளியானதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஈ.வே ரா பெரியார் சாலை, காமராஜர் சாலை , அண்ணா சாலை ஆகிய பெயர்களை மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க எம்.பி.க்கள் தலைமைச் செயலாளரை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளனர்.

ஆர்.எஸ்.பாரதி புகார் மனு

ஆர்.எஸ்.பாரதி புகார் மனு

தி.மு.க அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர் எஸ் பாரதி, வில்சன் எம்.பி, தி.மு.க வழக்கறிஞர் இளங்கோ ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:- திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் - சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மிகுந்த வலி மற்றும் வேதனையுடன் இந்தக் கடிதத்தை எழுத வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளோம்.

தலைவர்களின் பங்களிப்பு

தலைவர்களின் பங்களிப்பு

சென்னையின் சில முக்கியச் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்குத் தமிழகத்தின் மிகப்பெரிய தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பது பொதுவாக அறியப்பட்டதாகும். இது அப்போதைய காலக்கட்டத்தில் இருந்த அரசு எடுத்த கொள்கை முடிவாகும். தமிழ்நாட்டின், அரசியல் - சமூக - பண்பாட்டு மற்றும் அறிவுசார் ஆளுமைகளின் நினைவாக சாலைகளுக்குப் பெயரிடுவது, மாநிலம் மற்றும் தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய மகத்தான சேவையை அங்கீகரிப்பதாகும். இத்தகைய பெரிய தலைவர்களையும், அவர்களது பங்களிப்பையும் வருங்காலத் தலைமுறையினர் நினைவு கூர்வதையும் - நினைவில் கொள்வதையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கை இது.

தலைவர்கள் பெயரில் சாலை

தலைவர்கள் பெயரில் சாலை

பூந்தமல்லி நெடுஞ்சாலையின் பெயர் கடந்த 1979-ம் ஆண்டு, தந்தை பெரியார் என அன்புடன் அழைக்கப்படும் மறைந்த ஈ.வெ.ராமசாமி நினைவாக, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என மாற்றப்பட்டது. திராவிட இயக்கத்தைக் கட்டமைத்த பேராளுமையான தந்தை பெரியார் சமத்துவம், சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுப் பாதையை வகுத்ததன் மூலம், தமிழ்நாட்டின் அரசியல், சமூக மாற்றங்களுக்கு அடிப்படையானவர் என்பதை ஒவ்வொரு தமிழரும் அறிவர். மிகப்பெரிய தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணா நினைவாக, மவுண்ட் ரோடுக்கு அண்ணா சாலை என்றும், மற்றொரு பெரிய தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான காமராஜர் அவர்களது நினைவாக, கடற்கரைச் சாலைக்கு காமராஜர் சாலை எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதேபோல், தமிழ் மன்னர் குறித்த மக்களின் உணர்வை மதிக்கும் வகையில், அரசிதழ் அறிவிக்கை மூலம் மகாபலிபுரம் சாலையின் பெயர் மாமல்லபுரம் சாலை என மாற்றப்பட்டது.

தமிழ் ஆளுமைகளை அவமதிக்கின்றனர்

தமிழ் ஆளுமைகளை அவமதிக்கின்றனர்

மாநில அரசின் கொள்கை முடிவுகளை இழிவு படுத்தும் வகையில், இந்த முக்கியச் சாலைகளின் பெயர்கள், கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு, கிராண்ட் சதர்ன் ட்ரங்க் ரோடு, கிராண்ட் நார்த்தன் ட்ரங்க் ரோடு மற்றும் மகாபலிபுரம் சாலை என மாற்றப்பட்டு, அப்பெயர்கள், அந்தச் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளிலும் காணப்படுகின்றன. மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் இத்தகைய ஒருபக்கச்சார்புள்ள நடவடிக்கை, உயர்ந்த தலைவர்களின் நினைவையும், தமிழக மக்களின் விருப்பங்கள் மற்றும் உணர்வுகளையும் அவமதிப்பதாகும். சாலைகளின் பெயர்களை மாற்றும் இந்த நடவடிக்கை, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தமிழ் ஆளுமைகளை அவமதிப்பதுடன், மாநிலத்தில் நெருடலான மற்றும் அமைதியற்ற சூழலை உருவாக்கும். மேலும் போராட்டங்களுக்கும், அமைதியின்மைக்கும் வழிவகுக்கக் கூடும்.

மக்களின் பொறுப்பு

மக்களின் பொறுப்பு

இந்த பெயர் மாற்ற நடவடிக்கை, திராவிட இயக்கத்தையும், அதன் ஆளுமையான தந்தை பெரியாரையும், விரும்பாத அ.இ.அ.தி.மு.க வின் வடநாட்டு எஜமானர்களின் கருத்தியலை மகிழ்விக்கும் செயலாகும் என்பது அனைவரும் நன்றாக அறிந்த ஒன்று. எல்லாவற்றையும் சமஸ்கிருத மயமாக்குவதும், காவி மயமாக்குவதுமே அவர்களது குறிக்கோள். எல்லாவற்றுக்கும் மேலாக, சிறந்த தமிழ்ப் புலவர் திருவள்ளுவருக்கு அவர்கள் மதச்சாயம் பூச முயன்ற பரிதாபகரமான முயற்சியை அனைவரும் பார்த்தனர். நமது அடையாளங்களை, பெருமைகளைப் பாதுகாப்பதும், நமது பண்பாட்டைப் பாதுகாப்பதும், நமது தலைவர்களையும், ஆளுமைகளையும் நினைவு கூர்ந்து கொண்டாடுவதும் தமிழ் மக்களிடம்தான் உள்ளது. இது நமது போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

உரிமையை நிலைநாட்டுங்கள்

உரிமையை நிலைநாட்டுங்கள்

எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தாங்கள் தலையிட்டு, தேவைப்பட்டால் மத்திய அரசு உட்பட, உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அந்தந்த சாலைகளுக்குப் பழைய பெயர்களையே மாற்றம் செய்து, தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டாலின் கண்டனம்

ஸ்டாலின் கண்டனம்

பின்னர் நிருபர்களிடம் பேசிய ஆர் எஸ் பாரதி கூறியதாவது:- அண்ணா சாலை, காமராஜர் சாலை ஆகிய இரண்டு சாலைகளுக்கும் தி.மு.க தலைவர் கலைஞர் பெயர் சூட்டினார்.ஈவேரா பெரியார் சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார். சில தினங்களுக்கு முன்பு எல்லோரும் அதிர்ச்சி அடையும் வகையில் Grand western trunk, northern trunk road, southern trunk road என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.இந்த பெயர் மாற்றத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேற்றைய கண்டனத்தை பதிவு செய்தார்.

முருகனுக்கு கண்டனம்

முருகனுக்கு கண்டனம்

இன்று அவரது சார்பில் பெயர் மாற்றம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தலைமைச் செயலாளரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம் மூன்று மிகப் பெரும் தலைவர்களின் பெயர்களை கொண்ட இந்த சாலைகளுக்கு பெயர் மாற்றம் செய்ய காரணம் என்ன? யாரை திருப்திபடுத்துவதற்காக இப்படி செய்கிறார்கள்? இந்த பெயர் மாற்றத்திற்கு பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கூறும் கருத்து பொருத்தமற்றது. அவர் அப்போது பிறக்கவே இல்லை. எனவே வரலாறு தெரிந்து முருகன் பேசவேண்டும் என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+