அந்த ஐபிஎஸ் பட்டமாவது அண்ணாமலை படித்து பெற்றதா? அதுவும் “நண்பர்” வாங்கி தந்ததா? முரசொலி கடும் தாக்கு
சென்னை : "அண்ணாமலையின் வாட்ச் அவரது நண்பர் தந்ததாம். அவருக்கு வீட்டு வாடகை நண்பர் செலுத்துகிறாராம். பெட்ரோல் மற்றும் ஊழியர்களின் ஊதியம் எல்லாமே நண்பர்கள் செலுத்துகிறார்கள் என்று அண்ணாமலை பேட்டி தந்துள்ளதே அவர் எத்தகைய மொல்லமாறி என்பதைக் காட்டவில்லையா? தான் பெற்ற ஐபிஎஸ் பட்டம் கூட தனக்காக நண்பர் எழுதிப் பெற்றது என்று கூறுவார்போல" என காட்டமாக விமர்சித்துள்ளது முரசொலி.
திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்வைத்து வந்தார். இந்நிலையில், அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியது. அண்ணாமலை தனது கையில் கட்டியிருப்பது ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் தயாரிக்கப்பட்ட வாட்ச் என்றும், தான் தேசபக்தன் என்பதால் இந்த வாட்சை கட்டியிருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

ரஃபேல் வாட்ச் பில்: அதைத்தொடர்ந்து, இந்த வாட்ச் வாங்கியதற்கான ரசீதை அண்ணாமலை வெளியிட வேண்டும் என திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருந்தார். அதற்கு, வாட்ச் வாங்கியதற்கான ரசீது தன்னிடம் இருப்பதாகவும், அதை விரைவில் வெளியிடுவதாகவும் அண்ணாமலை கூறினார். மேலும், திமுகவினரின் ஊழல் பட்டியலும் சேர்த்து ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்படும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ரஃபேல் வாட்ச் பில் எனக் கூறி சில ரசீதுகளை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். கோவையைச் சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து இந்த ரஃபேல் வாட்ச்சை 3 லட்சத்திற்கு வாங்கினேன். 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த வாட்சை வாங்கிய அவர், மே மாதம் என்னிடம் கொடுத்தார் என்று தெரிவித்தார்.

மாதம் 7-8 லட்சம் : மேலும் பேசிய அண்ணாமலை, "அரசியல்வாதியாக இருப்பதால் மாதத்திற்கு 7 முதல் 8 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இந்த செலவை எப்படி தனி ஆளாக சமாளிக்க முடியும்? சுற்றி இருக்கும் நண்பர்கள் உதவி, கட்சியினர் உதவியை வைத்து நடத்தி வருகிறேன். எனது மூன்று பி.ஏக்களுக்கு எனது நண்பர்கள்தான் சம்பளம் கொடுத்து வருகிறார்கள். காருக்கு டீசல் கட்சி கொடுக்கிறது.
சிஆர்பிஎஃப் பாதுகாப்புக்கு பிறகு வீடு மாற்றியதால் அதற்கான வாடகையை ஒரு நண்பர் கொடுக்கிறார். நான் பயன்படுத்தும் காரும் வேறு ஒருவருடையது." எனக் கூறியிருந்தார். இதற்கு "அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் 3.75 லட்சம். மாதாமாதம் இதை யார் கொடுப்பது? நண்பர் என்றால் ஒரு மாதம் உதவி செய்யலாம். வருடம் முழுக்க யார் உதவி செய்வார்?" என சந்தேகங்களை எழுப்பியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
ஐபிஎஸ் பட்டமாவது.. : இந்நிலையில், அண்ணாமலை கூறிய தகவல் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி. முரசொலி நாளிதழில் சின்னத்தம்பி பெரியதம்பி என்கிற பகுதியில், அண்ணாமலையை விமர்சித்து ஒரு பத்தி வெளியாகியுள்ளது. அதில், "ஏண்ணே, ரஃபேல் வாட்சை மூன்று லட்சம் கொடுத்து நண்பரிடம் இருந்து வாங்கினேன் என அண்ணாமலை கூறி, நண்பர் வாங்கிய பில் என்ற பெயரில் ஒரு பேப்பரைக் காட்டியுள்ளாரே.." என்று சின்னத்தம்பி கேட்கிறார்.
அதற்கு பெரியதம்பி, "ஆமாம் தம்பி.. அண்ணாமலை ஒரு 420 என்று பிஜேபியில் இருந்து விலகிய அந்தக் கட்சியின் தொழில்நுட்ப அணியின் செயலாளர் கூறியது எத்தனை சரியான மதிப்பீடு என்பதற்கு மேலும் வலு சேர்த்துள்ளார் அண்ணாமலை. அவரது வாட்ச் நண்பர் தந்ததாம். அவருக்கு வீட்டு வாடகை நண்பர் செலுத்துகிறாராம்.
தனது வாகனங்களுக்கு பெட்ரோல் செலவு மற்றும் ஊழியர்களின் ஊதியம் எல்லாமே நண்பர்கள் செலுத்துகிறார்கள் என்று அண்ணாமலை பேட்டி தந்துள்ளது அவர் எத்தகைய மொல்லமாறி என்பதை சுட்டிக் காட்டவில்லையா? தான் பெற்ற ஐபிஎஸ் பட்டம் கூட தனக்காக நண்பர் எழுதிப் பெற்றது என்று கூறாமல் விட்டாரே!" என்கிறார்.












Click it and Unblock the Notifications