தாம்பரம் சேலையூரில் துணியில் சுற்றப்பட்டு கிடந்த இளைஞர் சூர்யா.. சென்னையை அதிர வைத்த சம்பவம்
சென்னை: சென்னை தாம்பரம் சேலையூர் அடுத்த மப்பேடு புதூர் பகுதியில் சாலையோர காலி இடத்தில் ஒரு மாற்றுதிறனாளி உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இதுபற்றி சேலையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் விரைந்து சென்று விசாரித்தனர்.விசாரணையில் 18 வயது குறைந்த பெண்ணை காதலித்து வந்த அந்த வாலிபர், 3 மாதங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தவர் என்பது தெரியவந்தது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னை தாம்பரத்தின் சேலையூரை அடுத்து உள்ள பகுதி மப்பேடு, இங்குள்ள புதூர் பகுதியில் சாலையோர காலி இடத்தில் ஒரு இளைஞர் உடல் கொல்லப்பட்ட நிலையில், கிடப்பதாக சேலையூர் போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு, இளைஞர் ஒருவர், கழுத்து அறுக்கப்பட்டு மோசமான முறையில் கொல்லப்பட்டிருந்தார்.

அவரது உடல், ஒரு துணியால் சுற்றப்பட்டிருந்தது. பிரித்து பார்த்தபோது, அவர் மாற்றுத்திறனாளி வாலிபர் என்பதும் கழுத்து அறுக்கப்பட்டு, வெட்டுக்காயத்துடன் கை, கால்கள் துணியால் கட்டப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சேலையூர் போலீசார் அனுப்பி வைத்ததுடன் விசாரணையை உடனடியாக தொடங்கினார்கள்.
சேலையூர் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சேலையூர் அடுத்த மப்பேடு பகுதியை சேர்ந்த 23 வயதாகும் சூர்யா (23) என்பது தெரியவந்தது. இவரது தந்தை இறந்து விட்டார். தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வந்தார் என்பது விசாரித்தபோது தெரியவந்தது. இளைஞர் சூர்யா நேற்றிரவு குடிபோதையில் வீட்டுக்கு சென்றாராம்.

சிறிது நேரம் இருந்து விட்டு வெளியே சென்று வருவதாக தாயிடம் கூறி சென்ற சூர்யா அதன்பிறகு திரும்பவரவே இல்லை. குடும்பத்தினருக்கு புதூர் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்துள்ளது. அவரை கொலை செய்து வாகனத்தில் கொண்டு வந்து வீசி விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றார்களா என்று விசாரித்து வருகிறார்கள்.
பின்னணி என்ன: மப்பேடு புதூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா, சிட்லபாக்கத்தை சேர்ந்த ஒரு சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தாராம். அவருக்கு 18 வயது ஆகாததால் அவரை, பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் காதல் விவகாரம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கிறார்கள். விசாரணை முடிவில் தான் என்ன நடந்தது என்பது முழு விவரமும் தெரியவரும்.
இதற்கிடையில் தகவலறிந்து பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் சேலையூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications