"ஆ, அவரா".. அப்ப நல்லக்கண்ணு, இப்ப இவங்க.. மேலிடத்தை நோக்கி போகும் உதயநிதி.. காரணமே வேற போல.. சபாஷ்
முதல்முறையாக அமைச்சர் பொறுப்பேற்றபிறகு, உதயநிதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்
சென்னை: அமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு, முதன்முறையாக நாளைய தினம் டெல்லி செல்கிறார் உதயநிதி ஸ்டாலின்.. இந்த பயணத்துக்கான பின்னணியில் சில காரணங்களும் சொல்லப்படுகின்றன..!
இந்த முறை திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே உதயநிதிக்கான அமைச்சர் பதவி பேச்சு, தொடர்ந்து அடிபட்டுக் கொண்டே இருந்தது..
ஒவ்வொருமுறையும் அதுகுறித்த செய்திகளும் மீடியாவில் இடம்பிடிப்பதும், பிறகு சத்தமே இல்லாமல் காணாமல் போவதும் தொடர்ந்து கொண்டே வந்தது.

அட்வைஸ் ஸ்டாலின்
இறுதியாக உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது.. அனால், உதயநிதி பதவியேற்பதற்கு முதல்நாள், முதல்வரின் இல்லத்தில் ஒரு சம்பவம் நடந்ததாக கூறப்பட்டது.. அதாவது, உதயநிதியின் அடுத்தக்கட்ட வளர்ச்சி முதல்வருக்கு சந்தோஷம்தான் என்றாலும், பொறுப்புமிக்க இடமென்பதால் கவலையும் அவரிடம் தொற்றி கொண்டதாம்.. அதனால்தான், உதயநிதியை தன்னிடம் அழைத்து, "இப்போது நீ தும்மினால்கூட செய்தியாகிவிடும்... அதனால், யாரிடம், எதைப் பேசினாலும் கவனமாக பேச வேண்டும். அரசு விழாவுக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும். சீனியர் அமைச்சர்களிடம் நிறைய அட்வைஸ் கேட்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் ஆலோசனை தந்தாராம் ஸ்டாலின்.

நல்லக்கண்ணு அபாரம்
மறுநாளே பதவியேற்பு விழாவுக்கு, ஆளுநர் மாளிகைக்கு உதயநிதி வந்திருந்தபோதே அவரது ஒவ்வொரு செய்கையும் உற்றுநோக்கப்பட்டது. பதவியேற்பு விழாவுக்கு முன்கூட்டியே எவ வேலு, கேஎன் நேரு, தங்கம் தென்னரசு உட்பட மூத்த தலைவர்கள் வருகை தந்திருந்தநிலையில், காரைவிட்டு இறங்கி நடந்து வந்த உதயநிதி, இவர்களை பார்த்ததுமே, திடீரென அவர்களை நோக்கி ஓடினர்.. மூத்த தலைவர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று தனித்தனியாக வணக்கம் சொல்லி, வாழ்த்துக்களை பெற்றார்... அதிலும் மூத்த தலைவர் நல்லகண்ணுவை வருடாவருடம் நேரில் சந்தித்து தொடர்ந்து வாழ்த்தும் ஆசியும் பெற்று வருகிறார்.

விஜயகாந்த்
இப்படி சீனியர்களிடம் வாழ்த்து பெறுவது என்பது இது முதல்முறை கிடையாது.. அன்றைய தினம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதுமே, அரசியல் கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக நேரில் சந்தித்து ஆசி பெற்றிருந்தார் உதயநிதி.. வழக்கமாக கட்சியில் உள்ள சீனியர்களிடம் ஆசியும் வாழ்த்தும் பெறுவது, வாரிசுகளின் இயல்பு என்றாலும், உதயநிதி ஒருபடி மேலே சென்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.. இன்னும் ஒருபடி மேலே சென்று, விஜயகாந்த் உட்பட எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டுக்கு சென்று, அவர்களிடம் வாழ்த்துக்களையும் ஆசியையும் பெற்றார்.

பணிவும் துணிவும்
அந்தவரிசையில்தான், பிரதமர் மோடி, மற்றும் அமித்ஷாவையும் சந்தித்து வாழ்த்து பெறவிருப்பதாக கூறப்படுகிறது.. தமிழக விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக நாளை டெல்லி செல்கிறார். அங்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளார்.. டெல்லி செல்லும் உதயநிதி, பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசவும் விரும்புகிறாராம்.. அந்தவகையில்தான் நாளை காலையில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காலை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆஹா அமித்ஷா
கடந்த 2 வருடகாலமாகவே, திமுகவின் பிரச்சாரத்தில் உதயநிதியின் பங்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது... எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கும் அதேநேரம், பாஜகவையும் உதயநிதி விமர்சிக்க தவறுவதில்லை.. அதனால்தான், டெல்லி தலைவர்களே தமிழகத்துக்கு பிரச்சாரம் செய்ய வரும்போதெல்லாம், ஸ்டாலினைவிட, உதயநிதியை விமர்சிப்பதில் கவனத்தை செலுத்தினர்.. பிரதமர் மோடி தன்னுடைய பிரச்சாரத்தில் பெருமளவு வாரிசு அரசியலை சுட்டிக்காட்டுவதிலேயே இதை உணர முடியும். கடந்த தேர்தலின்போது, விழுப்புரத்தில் அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய வந்திருந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா..

பெருங்கவலை
அப்போது, "பெண்களை இழிவுபடுத்தும் திமுக கூட்டணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். சோனியா காந்திக்கு ராகுலைப் பற்றியும், ஸ்டாலினுக்கு உதயநிதியை பற்றியும்தான் கவலை என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.. அமித்ஷா இவ்வாறு விமர்சித்த நேரம், உதயநிதி எம்எல்ஏ பதவியிலும் இல்லை. அமைச்சர் பதவியிலும் இல்லை.. எய்ம்ஸ் செங்கல்லை உதயநிதி கையில் எடுத்ததுமே, தேசிய தலைவர்களும் உதயநிதியை விமர்சிக்க துவங்கிவிட்டனர்..

ஜரூர் ஸ்பீடு
என்றாலும், அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் திமுக - பாஜக இருவேறு கட்சிகளும் முரண்பட்டு கிடந்தாலும், மூத்த தலைவர்களை மதிக்கும் பாங்கு உதயநிதியிடம் உள்ளதை நெகிழ்ந்து சுட்டிக்காட்டுகிறார்கள் உடன்பிறப்புகள்.. அந்தவகையில்தான், நாளையதினம், பிரதமர் மற்றும் அமித்ஷாவை சந்திக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளதாக சொல்கிறார்கள்.. முதல்முறையாக அமைச்சர் பொறுப்பேற்று உதயநிதி, டெல்லி செல்ல உள்ளநிலையில், அவரை வரவேற்க டெல்லி திமுக ஜரூராக தயாராகி கொண்டிருக்கிறது..!!!












Click it and Unblock the Notifications