சொந்த ஊருக்கு போறீங்களா? ஷாக் கொடுத்த விமான கட்டணம்.. ஒரேயடியாக ஏறிய டிக்கெட் விலை
சென்னை: தொடர் விடுமுறை காரணமாக மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. வார நாட்களில் ரூ 3 ஆயிரத்திற்கு விற்பனையான டிக்கெட்டுகள் தற்போது தலை சுற்றும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் வேலை நிமித்ததாகவும் கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காகவும் தங்கியிருப்பவர்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தொடர் விடுமுறை நாட்கள் என்றால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படும். பலரும் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்க்கு சென்று விட்டு வருவதை பார்க்கலாம். இதனால் ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதும்.

தனியார் ஆம்னி பேருந்துகளில் இந்த விடுமுறை நாட்களில் பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல வேண்டும் என்றால் சாதாரண நாட்களில் ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருக்கும் டிக்கெட்டுகள் விடுமுறை நாட்களில் 3 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படும்.
ரெட் பஸ் உள்ளிட்ட புக்கிங் செயலிகளில் வெளிப்படையாகவே இப்படி கட்டணம் வசூலிக்கப்படுவதை காண முடிகிறது. பேருந்து ரயில்களில், இடம் கிடைக்காத சில நடுத்தர வர்க்கத்தினர் கூட தற்போது விமானங்களில் செல்வதை பார்க்க முடிகிறது. கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும் விரைவாக சொந்த ஊர்களுக்கு சென்று விடலாம் என்பதால் விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், தொடர் விடுமுறையால் விமானங்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுதந்திர தினம் வரும் செவ்வாய்க்கிழமை வருவதால் அன்றைய தினம் அரசு விடுமுறை ஆகும். இடையில் திங்கள் கிழமை மட்டுமே வேலை நாளாக உள்ளது. எனவே, அந்த ஒரு நாளும் அலுவலகங்களுக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு பலரும் வெள்ளிக்கிழமைகளில் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர்.
யணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்புப் பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும், விமானத்தில் செல்ல விரும்பும் பயணிகள் டிக்கெட் விலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு வழக்கமாக ரூ.3,000-என்ற அளவில் தான் டிக்கெட்டுகள் விலை இருக்கும்.
ஆனால், தொடர் விடுமுறை காரணமாக தூத்துக்குடி, மதுரை செல்லும் விமானங்களில் செல்வதற்கான டிக்கெட் ரூ. 10,000-க்கு மேல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம் செல்வதற்கான டிக்கெட் கட்டணமும் ரூ 15 ஆயிரம் என உள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விடுமுறை நாட்களை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் போக்கை முறைப்படுத்தி நிலையான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications