"குழந்தைகளை யாரோடும் ஒப்பிடாதீர்கள்" பெற்றோருக்கு அன்பில் மகேஷ் சொன்ன அட்வைஸ்!
சென்னை: பெற்றோர் தங்களது குழந்தைகளை வேறு குழந்தைகளுடன் ஒப்பிட வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை கூறியுள்ளார்.
சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் பள்ளியின் 38வது ஆண்டு விளையாட்டு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் 2 வெள்ளை நிற புறாக்களை வானில் பறக்கவிட்டார். மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

கோப்பைகளை வழங்கிய அன்பில் மகேஷ்
இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பல்வகை நடனம், சிலம்பாட்டம், கராத்தே உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டு ரசித்தார். இதன்பின்னர் பள்ளியில் நடத்தப்பட்ட ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், கோப்பைகளை வழங்கி சிறப்பித்தார்.

அன்பில் மகேஷ் பேச்சு
பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், நிறைய குழந்தைகள் இன்றைக்கு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளனர். அதிலிருந்து மாணவர்களை நாம் வெளியே கொண்டு வர வேண்டும். அவர்கள் சொல்லும் காரணம் எங்களுக்கு மன அழுத்தமாக இருக்கிறது. அதனால் தான் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுகிறோம் என்று கூறுகிறார்கள்.

ஆன்லைன் விளையாட்டுகள்
ஆனால் நடைமுறை அப்படியல்ல. ஆன்லைனில் விளையாட்டுகளுக்கு அடிமையாகி, அதனால் மட்டுமே மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு நாம் இதுபோன்ற விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் போது, உடல் மற்றும் மனரீதியாக ஒருங்கிணைப்பு ஏற்படும்.

பெற்றோருக்கு அறிவுரை
மாணவர்களுக்கு நிச்சயம் படிப்பில் மதிப்பெண் தேவை. கண்டிப்பாக படிக்க வேண்டும். அதனை யாரும் வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் நான் பெற்றோருக்கு வைக்க விரும்புகிற வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான். அது, தயவுசெய்து நம்முடைய குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள் என்று அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications