மதிமுகவில் ஐடி விங்கை வலுப்படுத்தும் துரை வைகோ! தொகுதி வாரியாக பொறுப்பாளர் நியமனம் தீவிரம்!
சென்னை: மதிமுகவில் ஐடி விங்கை வலுப்படுத்தும் பணியை கையில் எடுத்துள்ள அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தொகுதி வாரியாக பொறுப்பாளர் நியமனத்தில் தீவிரம் காட்டுகிறார்.
40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் மதிமுகவில் ஐடி விங் பொறுப்பாளர்களை நியமித்துள்ள அவர் அடுத்ததாக 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். மதிமுக ஐடி விங் குறித்து துரை வைகோவே கூறியிருப்பதாவது;

''மதிமுக இணையதள அணி அதிகாரபூர்வமாக வைகோ அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு, தற்போது நடைமுறையிலும் செயல்பட்டு வருகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள். இதுவரை 11 மண்டல பொறுப்பாளர்களும், 22 நாடாளுமன்ற பொறுப்பாளர்களும் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டு, இணையதள அணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
அதனுடன் இப்போது மீதமுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் இணையதள பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கூடுதலாக 2 மண்டல பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டு, மொத்தமாக 13 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் இணைந்து செயல்பட 53 சட்டமன்றப் பொறுப்பாளர்களும் தலைவர் வைகோ அவர்களின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே தங்கள் பணிகளுக்கு இடையில் இணையதள அணியினருக்கு உறுதுணையாக இருந்து அனைத்து பொறுப்பாளர்களையும் தேர்ந்தெடுக்க ஒத்துழைப்பு நல்கிய மாவட்டச் செயலாளர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இனி வரும் காலங்களில் எஞ்சியுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் உடனடியாக நியமனம் செய்யப்படுவார்கள் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இணையத்தில் தலைவர் வைகோவின் கொள்கைகளையும், இயக்கத்தின் செயல்பாடுகளையும மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியினை, இணையதள அணியினர் தொடர்ந்து செய்வார்கள், அவர்களுக்கு கழகத் தோழர்கள் ஒத்துழைப்பு தந்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications