ஆடியில தீர்மானம் போட்டு..ஆவணியில் வந்த ஹேப்பி நியூஸ்! அன்புமணி கையில் மாம்பழம்! சீனியர் சொன்ன தகவல்!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் வெடித்திருக்கும் நிலையில் இருதரப்பும் பொதுக்குழுவை நடத்தி இருக்கிறது. இந்த நிலையில் ராமதாஸ் பொதுக்குழுவை நடத்துவதற்கு முன்னரே, தன் தரப்பு பொதுக்குழுவை கூட்டிய அன்புமணி, அதன் தீர்மானங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருந்தார். இந்த நிலையில் அன்புமணி பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாக வெளியாகி இருக்கும் தகவல் அவரது ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் இன்னும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்று பாட்டாளி மக்கள் கட்சி. அடிப்படையில் மருத்துவரான ராமதாஸ், வன்னியர் சங்கத்தை உருவாக்கி பின்பு அதனை பாட்டாளி மக்கள் கட்சியாக உருவாக்கினார். அந்த கட்சியின் மூலம் பலர் எம்எல்ஏ, எம்பி, மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றிருக்கின்றனர்.
தொடர்ந்து தனது மகனான அன்புமணி ராமதாஸ் கட்சிக்குள் கொண்டு வந்த அவரை எம்பி ஆகவும் மத்திய அமைச்சராகவும் ஆக்கினார். பாமக இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவராக இருந்த ஜிகே மணி கௌரவ தலைவராக நியமிக்கப்பட்டார்.

பாமக மோதல்
அதற்கு பிறகு சில நிகழ்வுகளில் ஜிகே மணிக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து வேட்பாளர்கள், கூட்டணி தொடர்பான முடிவுகளையும் அன்புமணியே எடுத்து வந்தார். இந்த நிலையில் வன்னியர் சங்க மாநாட்டுக்கு முன்னதாக ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் வெடித்தது. அன்புமணியை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும், அவரை செயல் தலைவராக நியமிப்பதாக அறிவித்தார் ராமதாஸ். இதனால் அன்புமணி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் அடுத்தடுத்து அன்புமணி ஆதரவாளர்களும் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டனர்.
அன்புமணி
மேலும் அந்த பதவிகளில் தனது ஆதரவாளர்களை நியமித்து வருகிறார் ராமதாஸ். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அன்புமணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் அதனை தடை செய்ய வேண்டும் என காவல்துறையிடம் கோரிக்கை வைத்தார். மேலும் அன்புமணியின் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இரு நிகழ்வுகளிலும் அன்புமணி தரப்பே வெற்றி பெற்ற நிலையில் பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
பொதுக்குழு
அடுத்த ஆண்டு வரை அன்புமணி தான் கட்சியின் தலைவராக தொடர்வார், கூட்டணி தொடர்பான முடிவு எடுக்கும் அதிகாரம் அன்புமணிக்கு வழங்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அந்த தீர்மானம் தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு அன்புமணி ராமதாஸ் டெல்லி சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் புதுச்சேரி அருகே கடந்த 17ஆம் தேதி ராமதாஸ் தரப்பு பொதுக்குழுவை நடத்தியது. அதில் அன்புமணிக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானங்களும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
தேர்தல் ஆணையம்
அதே நேரத்தில் பாமக விதி 15, 16ன் படி பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கே அதிகாரம் உள்ளது. அவர்கள் தான் எந்த கூட்டங்களையும் கூட்ட முடியும் என்கிறது அன்புமணி தரப்பு. இருதரப்பும் பொதுக்குழுவை நடத்திய நிலையில் யார் தரப்பை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப் போகிறது என்பதுதான் பாமக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் அன்புமணி தரப்பு திருமணங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
அன்புமணி தான் பாமக?
அன்புமணி டெல்லி பயணம் மேற்கொண்ட நிலையில் கட்சியின் விதிகளை சுட்டிக்காட்டி பொதுக்குழு மூலம் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்தான் தலைவர், பொது செயலாளர், பொருளாளர் அப்படித்தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எங்களை நீக்கும் அதிகாரம் நிறுவனருக்கு இல்லை என அன்புமணி எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அன்புமணி தரப்பு பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாக கூறுகின்றனர் அன்புமணி தரப்பு வழக்கறிஞர்கள்.
பாமக வழக்கறிஞர்
இது தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த பாமக வழக்கறிஞர் ஒருவர்," மாநாடு நடைபெற்ற அடுத்த நாளே தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் பொதுக்குழு மூலமே அன்புமணி தலைவராக முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டப்பட்டது. பாமக கட்சி விதிப்படி அன்புமணி தான் தலைவர். பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் தான் பாமக நிர்வாகிகள் என வலியுறுத்தப்பட்டது. தற்போது அந்த தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி அன்புமணி தான் பாமகவின் தலைவர். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்" என்றார்.












Click it and Unblock the Notifications