ஆரம்பிக்கலாங்களா..பிப்ரவரி 21 முதல் மீண்டும் பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி.. வடக்கு மண்டலம் டார்கெட்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதியில் இருந்து தொடங்குகிறார் [Edappadi Palanisamy Campaign].
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. ஒரு சில கட்சிகள் மட்டுமே கூட்டணியை அறிவிக்காமல் உள்ளனர். தேமுதிக, ஓ.பன்னீர்செல்வம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே முடிவு எடுக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக மண்டல வாரியாக மகளிரணி, இளைஞரணி, பூத் கமிட்டி பயிற்சியாளகள் மாநாடு நடைபெற்று வருகிறது. திமுகவிடம் இருந்து ஆட்சியை பறிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணி முயற்சி செய்து வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே சுமார் 180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்துள்ளார். இந்நிலையில் அவரின் இரண்டாம் கட்ட சுற்றுப் பயண விபரம் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 21 ஆம் தேதி முதல்
அதன்படி 21.2.2026 தேதி சனிக்கிழமை முதல் எடப்பாடி பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார். அன்றைய தினம் அவர் ஆவடி, அம்பத்தூர் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். 22.2.2026 தேதி ஞாயிற்றுக்கிழமை மாதவரம், பொன்னேரி தொகுதிகளிலும், 25.2.2026 தேதி புதன்கிழமை மதுரவாயல், பூந்தமல்லி தொகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் செய்கிறார்.
எடப்பாடி பிரசாரம்
26.2.2026 தேதி வியாழக்கிழமை தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை திருவள்ளூர் மாவட்டத்திலும், 27 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் செய்கிறார். அதன் பிறகு அடுத்த கட்ட பயணம் பற்றிய விபரம் வெளியாகும் என கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications