அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி? எடப்பாடி கேள்வி
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை காவல் ஆய்வாளரின் முழு ஒத்துழைப்போடு 24 மணிநேரமும் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வருவது அம்பலமாகியுள்ளதாக கூறி தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்து உள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "விழுப்புரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கள்ளச்சாராயத்தால் 23 பேர் பலியான சுவடே இன்னும் மறையும் முன்னர், நேற்று தஞ்சாவூரில் அரசு பாரில் சட்டவிரோதமான மது விற்பனையில் இருவர் மரணம் அடைந்து இருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில், இன்று தனியார் தொலைக்காட்சி நடத்திய கள ஆய்வில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு அனுமதி பெற்ற மதுபான பாரில் சிறிதும் அச்சமின்றி, கந்தவர்கோட்டை காவல் ஆய்வாளரின் முழு ஒத்துழைப்போடு அவர்களின் நேரடி கண்காணிப்பில் 24 மணிநேரமும் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வருவது அம்பலமாகியுள்ளது.
இதை கண்டு சட்டவிரோத மது விற்பனையால் இன்னும் எத்தனை உயிரிழப்புகள் நிகழுமோ என மக்கள் அச்சம் கொள்கின்றனர். மக்கள் உயிர்களைப் பற்றி கொஞ்சமும் அக்கறையின்றி தங்களுக்கு கமிஷன் கிடைத்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்துடன் செயல்படும் இந்த விடியா திமுக அரசு இன்னும் எத்தனை உயிர்பலிகளை வாங்கத் துடிக்கிறது எனத் தெரியவில்லை.
ஆகவே இந்த குடும்ப ஆட்சியின் பொம்மை முதல்வர் இதுகுறித்தாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார். நேற்றும் தஞ்சாவூரில் இருவர் உயிரிழந்தது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் ஒரு கண்டன பதிவை வெளியிட்டு இருந்தார்.
அதில், "தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட பாரில், உரிய நேரத்திற்கு முன்பாக சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுபானம் அருந்திய திரு குப்புசாமி, திரு விவேக் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளார்கள்,அவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும்,வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி? என்பதனை இந்த அரசு தெளிவுபடுத்த வேண்டும். முறையற்ற மது விற்பனையால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே அரசே ஏற்று மது விற்பனையை நடத்தி வருகிறது.
அப்படி இருக்கையில் சமீபகாலமாக அரசு மதுபான விற்பனையில் பல்வேறு திட்டமிட்ட முறைகேடுகள் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருவதையும் அதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதையும் நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. நான் பலமுறை இத்துறையில் நடந்துவரும் முறைகேடுகளை எடுத்துரைத்தும் வழக்கம்போல் இந்த அரசு மக்களின் உயிர் காக்க அக்கறையின்றி மெத்தனம் காட்டி வருகிறது.

ஆகவே தஞ்சாவூர், செங்கல்ப்பட்டு மற்றும் விழுப்புரத்தில் நடைபெற்ற போலி மதுபான-கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கும் உரிய நீதி வேண்டியும், இதனை உரிய விசாரணைக்கு உடனே உட்படுத்த வேண்டியும் மாண்புமிகு ஆளுநரிடம் நாளை மனு அளிக்க உள்ளோம்." என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்படி இன்று காலை ராஜ்பவனுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து இது தொடர்பாக மனு வழங்கினார்.












Click it and Unblock the Notifications