பொங்கியது புஸ்வானமாகியது! சசிகலா பரபரப்புக்கு ஓபிஎஸ் முற்றுப்புள்ளி! அதிமுகவில் நடந்த திடீர் மாற்றம்
சென்னை: அதிமுகவில் சசிகலாவை இணைத்துக் கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்து முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாக செல்ல தொடங்கி இருக்கிறார்.
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை வங்கியிலிருந்து எடுப்பதற்காக மதுரை வந்திருந்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தொடர்பாக அளித்த ஒரு பேட்டி பெரும் பரபரப்பு காரணமாக மாறியது.
அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்று பன்னீர்செல்வம் ஒரே போடாக போட்டார்.

ஜெயக்குமார் பேட்டி
இந்த ஒற்றை பேட்டி அடுத்த சில நாட்களுக்கு தமிழக அரசியலில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக சீனியர் நிர்வாகிகள் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே கிடையாது சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம் என்று தெரிவித்தனர்.

மாறி மாறி பேட்டிகள்
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி ஒரு படி மேலே போய், சசிகலா அதிமுகவில் சேர்ந்து விட்டால் தான் இறந்து விட்டதாக அர்த்தம் என்று ஆவேசமாக பேட்டி அளித்தார். அதேநேரம் தென் மாவட்டங்களை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம் பேட்டிக்கு எதிர் கருத்து தெரிவிக்கவில்லை. அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினராக உள்ள பிரபாகர் தனது பேட்டியில் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகள் ஒன்று கூடி முடிவெடுப்பார்கள் என்று பன்னீர்செல்வம் சொன்னார். இதில் தவறு கிடையாது என்று பேட்டி அளித்தார்.

இணைந்து பயணம்
அதிமுகவில் நடைபெற்ற இந்த சம்பவங்களால் சசிகலா தரப்பு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. சசிகலா அதிமுகவில் இணைவதற்கான வாய்ப்பு உருவாகி விட்டது என்ற பேச்சுக்கள் வெளியாகின. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கும் தனக்கும், எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்தார். மேலும், இன்று செவ்வாய்க்கிழமை, டெல்டா மாவட்டங்களான, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் கன மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் பார்வையிடுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரட்டை குழல் துப்பாக்கிகளாக மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது தெளிவாகிறது.

இரு தகவல்கள்
இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் கேட்டபோது இருவகையான தகவல்கள் உலா வருகின்றன. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னுக்கு பன்னீர்செல்வம் சென்றார். அங்கு சசிகலா ஆதரவாளர்கள் ஓபிஎஸ்சுக்கு எதிராக கோஷம் எழுப்புவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது என்பதற்காக சசிகலா தொடர்பாக பாசிட்டிவ் சிக்னல் ஒன்றை கொடுத்தார். உண்மையிலேயே சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு கிடையாது என்கிறார்கள்.
Recommended Video

டெல்லி அழுத்தம்
இன்னொரு தரப்பு, டெல்லியிலிருந்து ஓ பன்னீர்செல்வத்திற்கு வந்த சிக்னல்களை அடுத்து சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்ற முடிவுக்கு அவர் மீண்டும் வந்துள்ளார் என்று கூறுகிறார்கள். சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று மனதளவில் ஓபிஎஸ் விரும்புகிறார். எனவேதான் தென் மாவட்ட அதிமுக சீனியர்களோடு சமீபத்தில் கூட ஆலோசனை நடத்தியிருந்தார். ஆனால் டெல்லி விரும்பவில்லை என்கிறார்கள். இந்த 2 காரணங்களில் எது உண்மையோ உறுதியாக தெரியாது. ஆனால் அதிமுகவில் நிலவி வந்த பரபரப்பான சூழ்நிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளது என்பது மட்டும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications