"எடப்பாடி ஆட்சியை காப்பாற்றியது பாஜக இல்லை.." உடைத்து பேசிய டிடிவி தினகரன்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்
சென்னை: அமித் ஷாவை சந்தித்துவிட்டுத் திரும்பியபோது முகத்தை மூடிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி வெளியே வந்தது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள டிடிவி தினகரன், 2017ல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக இல்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும், தனது ஆட்சியைக் காப்பாற்றியவர்கள் மீதே நன்றி மறந்து நடவடிக்கை எடுத்தவர் தான் எடப்பாடி என்றும் டிடிவி தினகரன் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
அண்ணா பிறந்தாளை முன்னிட்டு சென்னையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவைச் சிலர் அழிக்க முயன்றதாகவும் அப்போது பாஜகவே அதிமுகவுக்கு உதவியது என்று பேசினார். இதற்காகவே பாஜகவுக்கு நன்றியோடு இருப்பதாகச் சொல்லியிருந்தார்.

டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் கடுமையாகப் பதிலடி கொடுத்து வருகிறார். நேற்றே இது தொடர்பாகப் பேசியிருந்த டிடிவி தினகரன், இன்றும் எடப்பாடியைச் சாடியுள்ளார். அதாவது எடப்பாடி பழனிசாமி முதல்வரான போது, அவரது ஆட்சிக்குச் சிக்கல் ஏற்பட்டபோது அவரை காப்பாற்றியது பாஜக இல்லை என்றும் அப்போது சட்டசபையில் இருந்த 122 அதிமுக எம்எல்ஏக்களை எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் காப்பாற்றினார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அவர், "அதிமுக ஆட்சியை பாஜக காப்பாற்றியதாகவும் இதனால் பாஜகவுக்கு நன்றியோடு இருப்பேன் என எடப்பாடி கூறுகிறார். 2017ல் எடப்பாடி ஆட்சி மீது திமுக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்த போது, அவரது ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக இல்லை. சட்டமன்றத்தில் அப்போது இருந்த 122 அதிமுக எம்எல்ஏக்கள் தான் அவரை காப்பாற்றினார்கள்.
பாஜக காப்பாற்றவில்லை
அப்போது ஓபிஎஸ் உட்பட 11 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே வாக்களித்தனர். அப்போதும் 122 அதிமுக எம்எல்ஏக்கள் தான் எடப்பாடி ஆட்சியைக் காப்பாற்றினார்கள். அப்போது பாஜக வந்து எடப்பாடியைக் காப்பாற்றவில்லை. அதன் பிறகு தான் பழனிசாமி நேரடியாக பாஜக காலிலேயே விழுந்துவிட்டார். இதனால் 4 ஆண்டுகள் அவரது ஆட்சி தொடர்ந்தது. ஆனால், இந்த ஆட்சி அமைய உதவியவர்கள் அன்று அவருக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் தான்.
ஆனால், அந்த நன்றியையே மறந்த அவர்களைப் பதவிநீக்கம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி.. அதேநேரம் அவருக்கு எதிர்த்து வாக்களித்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களைச் சேர்த்துக் கொண்டார்.
பாஜகவுக்கும் துரோகம் செய்தவர்
அதாவது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா பெங்களூர் சிறைக்குப் போனார். அப்போது நடைபெற்ற வாக்கெடுப்பில் சட்டசபையில் எடப்பாடியைக் காப்பாற்றியது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான். அதற்குப் பிறகு பாஜக அவரை 4 ஆண்டுகள் காப்பாற்றுவது உண்மை தான். அப்படிப்பட்ட பாஜகவுக்கும் அவர் என்ன செய்தார்? லோக்சபா தேர்தல் என்பது தேசியக் கட்சிக்கு முக்கியமானது. அப்படியிருக்கும்போது 2024ல் நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் பாஜகவிற்குத் துரோகம் செய்துவிட்டு கூட்டணியை விட்டு வெளியேறியவர் எடப்பாடி!
எடப்பாடி மீது தாக்கு
உள்ளாட்சித் தேர்தலில் கூட பாஜகவுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்காமல் வெளியேறியவர் எடப்பாடி பழனிசாமி. எனவே, இப்போது அவர்களுக்கு நன்றியுடன் இருப்பேன் எனச் சொல்வது சூழ்ச்சியாகவே இருக்கும். பழனிச்சாமி எப்போதும் முகமூடி மனிதர்தான்.. இரட்டை வேடம் போடுபவர்.. அவருக்குத் துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது. நன்றி என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்பவர் தான் எடப்பாடி" என்று கடுமையாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications