ரெய்டு.. வைத்திலிங்கத்துக்கு சொந்தமான அலுவலகங்களை திறக்க யாருமே வரல.. 2 மணி நேரமாக காத்திருக்கும் ED
சென்னை: சென்னை அசோக் நகரில் வைத்திலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 நிறுவனங்களின் அலுவலகங்கள் ஒரே இடத்தில் செயல்படும் நிலையில், அங்கு இன்று அலுவலகத்தை திறக்காததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரமாக காத்திருக்கின்றனர்.
அதிமுக ஆட்சியில் 2011 - 2016 வரை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்த நிலையில் அந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர் தொடர்புடைய இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

வைத்திலிங்கம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர். முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். தஞ்சை மண்டல அதிமுகவின் முக்கிய முகமாகத் திகழ்ந்தவர். எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோரை கட்சியை விட்டு நீக்கிய நிலையில் அவர்கள் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர்.
தனியார் நிறுவனம் குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்க 27.90 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது அறப்போர் இயக்கம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர். லஞ்சப் பணம் வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முகபிரபு ஆகியோர் இயக்குநர்களாக இருக்கும் நிறுவனத்துக்கு கடனாக வழங்கப்பட்டதுபோல கணக்கு காட்டப்பட்டுள்ளது என புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பன்னீர்செல்வம், ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் எம்எல்ஏ விடுதியில் உள்ள வைத்திலிங்கம் அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எம்எல்ஏக்கள் விடுதியில் வைத்திலிங்கம் அறையில் 6 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வைத்திலிங்கம் மகன் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் நிதி நிறுவன ஊழியர் கோடீஸ்வரி என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவேற்காட்டில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்திலும், ரவிக்குமார் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அசோக் நகர் 10வது அவென்யூவில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 நிறுவனங்களின் அலுவலகங்கள் ஒரே இடத்தில் செயல்பட்டு வருகின்றன. அங்கு சோதனை நடத்துவதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர்.
ஆனால், இன்று ஊழியர்கள் வந்து அலுவலகத்தை திறக்கவில்லை, அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தும் அலுவலகத்தை திறப்பதற்கு ஊழியர்கள் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. அலுவலகத்தை திறக்காததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications