"ஊஞ்சலாடுகிறது இளமை".. இளையராஜாவை விடுங்க.. ரஜினிகாந்த்தா? யாரது? அட இவ்ளோ இருக்கா.. பூரித்த பிரபலம்
சென்னை: இளமை ஊஞ்சலாடுகிறது படம் உருவானது குறித்து, பிரபல டைரக்டர் சந்தான பாரதி நெகிழ்ந்து கூறியுள்ளார்.. அவர் சொன்ன அந்த நினைவலைகளை, கமல், ரஜினி இருவரின் ரசிகர்களும் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.
1978ல் வெளியான படம் இளமை ஊஞ்சலாடுகிறது.. டைரக்டர் ஸ்ரீதர் இயக்கிய படம்.. கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவருக்குமே மறக்க முடியாத வெற்றி படம்..

கதாபாத்திரங்கள்: காதல், நட்பு, சபலம், சந்தேகம், தகராறு, சுமூகம் போன்ற இயல்புகளுடன் நடமாடிய கதாபாத்திரங்கள், தமிழக மக்களை ஈர்த்தது.. கமல் வளர்ந்து வரும் நடிகராகவும், ரஜினி அறிமுக நடிகராகவும் இருந்த காலகட்டம் அது.. இருவருமே அந்த படத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளும் அளவுக்கு களம் அமைத்து தந்தார் டைரக்டர் ஸ்ரீதர்.
ஸ்ரீப்ரியா + ஜெயசித்ரா இருவருக்குமே அழகியல் கேரக்டர்கள்.. இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் முத்தான பாடல்களாக அமைந்தன.. இந்த படத்தில், வேறு இரண்டு நடிகர்களைத்தான் முதலில் ஒப்பந்தம் செய்வதாக இருந்ததாம். ஆனால் கமலும் ரஜினியும் போடலாம், பிரமாதமாக இருக்கும் என்று சொன்னது, இந்த உதவி இயக்குநர்கள் பி.வாசு சந்தான பாரதி என்ற இரட்டையர்கள்தான்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ளார், சந்தான பாரதி. அப்போது, இந்த படத்தில் எப்படி ரஜினி - கமலை நடிக்க வைக்க இயக்குனரை சம்மதிக்க வைத்தனர் என்பது குறித்து விளக்கமாக சொல்லியிருந்தார்.. அதன் சுருக்கம்தான் இது:
யாரந்த ரஜினி?: "மீனவ நண்பன்" படம் முடிந்ததுமே, "இளமை ஊஞ்சலாடுகிறது" கதையை எங்களிடம் சொன்னார் டைரக்டர் ஸ்ரீதர்.. இதில் நடிப்பதற்காக, அப்போதிருந்த ஹீரோ, ஹீரோயின்கள் பெயர்களையும் எங்களிடம் சொன்னார்.. உடனே நானும், வாசுவும், "அவங்கெல்லாம் இப்பவே நடுத்தர வயதுக்கு வந்துவிட்டார்கள்.. அவர்களுக்கு பதிலாக வேறு யாரையாவது நடிக்க வைக்கலாம். ரஜினிகாந்த்துன்னு புதுப்பையன் ஒருத்தர் வந்திருக்காரு.. புவனா ஒரு கேள்விக்குறி படமெல்லாம் நல்லா ஓடிட்டு இருக்கு.. அதேபோல, கமல்ஹாசன் இப்போது நல்லா பிரபலமாகிட்டு வர்றார்.. அவர்களை நடிக்க வைக்கலாம் என்றோம்.

அதற்கு ஸ்ரீதர், "ரஜினிகாந்த்தா? யார் அவர்? ஆனால் அவர்களை யாருன்னே எனக்கு தெரியாதே" என்றார்.. டைரக்டர் இப்படி சொல்றதுக்கு காரணம், "வெளிப்படங்களை எல்லாம் அவர் பார்க்க மாட்டார்.. அப்படியே பார்த்தாலும் தியேட்டர் போயிதான் படம் பார்க்கணும்.. இவருடைய வேலையிலேயே பிஸியாகவும் இருந்தார்.. அதனால் அவர்கள் யாரென்று தெரியவில்லை.
அன்னக்கிளி: அதேபோல, எம்எஸ்வியை மியூசிக் போட வெச்சிடலாம் என்றார்.. இதற்கு நானும் வாசுவும், "இளையராஜா நல்லா மியூசிக் போடறார்.. "அன்னக்கிளி" படம் உட்பட எல்லா படமும் ஹிட் ஆயிடுச்சு.. அவரை போட்டால் நல்லா இருக்கும்" என்றோம். இதைக்கேட்டதும், அவர் முகம் மாறிவிட்டது.. உடனே எங்கள் 2 பேரையும் வீட்டுக்கு போங்கடா என்று கோபமாக சொல்லிவிட்டார். "ஏன்டா, நானும் எம்எஸ்வியும் 40 வருஷமாக பழக்கம். நேத்து வந்த இசையமைப்பாளரை போட சொல்றீங்களே.. என் படத்துல எம்எஸ்வி பாட்டெல்லாம் என்ன ஹிட் தெரியும் இல்ல? அவரை விட்டுட்டு எப்படி இன்னொருத்தரை போட சொல்றீங்களே? என்றார்.

"அப்படியில்லை சார்.. நியூ டிரெண்ட்டிங்கில் இருக்கிறார்.. நல்லா மியூசிக் போடறார் அதனால்தான் அவரை சொன்னோம்" என்றோம்.. அப்படியிருந்தும் அவர் ஏற்கவில்லை.. அதனால், நாங்களும் வீட்டுக்கு வந்துவிட்டோம்.. எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர்களை மறுத்துவிட்டாரே என்ற வருத்தத்தில் இருந்தோம்.. பிறகு 2 நாள் கழித்து, எங்க டைரக்டர் வர சொன்னதாக கூப்பிட்டாங்க. நானும், வாசுவும் அங்கே போனால், ராஜா சார் மியூசிக் போட்டுட்டு இருக்கார்.. பக்கத்தில் கங்கை அமரன் கிடார் வாசிச்சிட்டு இருக்கார்.
இளையராஜா: எங்களுக்கு ஆச்சரியமாக போய்விட்டது.. எனக்கு கங்கை அமரனை அதுக்கு முன்னாடியே நல்லா தெரியும்.. ரொம்ப பழக்கம்.. உங்க டைரக்டர்கிட்ட எங்களை பத்தி சொல்லுங்க என்று சொல்லி கொண்டே இருப்பார்.. அதனால், சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தோம்.. இளமை ஊஞ்சலாடுகிறது படம் ஆரம்பித்ததுமே, அவர்களை பற்றி சொன்னோம்.. நாங்கள் இளையராஜா பற்றி சொன்னதும், அவரை பற்றி விசாரித்திருப்பாரா? என்னவென்று தெரியவில்லை.. யாரையாவது விசாரிச்சரிப்பார் போல.. அப்படித்தான், அந்த படம் உருவானது" என்றார்.












Click it and Unblock the Notifications