38 ஆண்டுக்கு பின்.. எம்எல்ஏவாக பதவி ஏற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.. பதவிப்பிரமாணம் செய்து வைத்த அப்பாவு
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து காங்கிரஸ் பெற்ற மிகப்பெரிய வெற்றிகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
சென்னை: இன்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன். 38 ஆண்டுக்கு பின் மீண்டும் சட்டசபைக்கு இதன் மூலம் ஈவிகேஎஸ் இளங்கோவன் செல்கிறார். காலை 11 மணிக்கு சபாநாயகர் அப்பாவு இவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. அங்கே எம்எல்ஏவாக இருந்த ஈவேரா திருமகன் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 27ம் தேதி நடந்த இந்த இடைத்தேர்தலுக்கான முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இங்கே திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.

காங்கிரஸ்
அவரை எதிர்த்து அதிமுக சார்பாக கேஎஸ் தென்னரசு போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் போட்டியிட்டார். 66575 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இங்கே மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதில் காங்கிரஸ் 64.6% வாக்குகளை வென்றுள்ளது. அதிமுக வெறும் 25.75% வாக்குகளை மட்டுமே வென்றுள்ளது. 1,10,556 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 43,981 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.

மாபெரும் வெற்றி
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து காங்கிரஸ் பெற்ற மிகப்பெரிய வெற்றிகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன். 38 ஆண்டுக்கு பின் மீண்டும் சட்டசபைக்கு இதன் மூலம் ஈவிகேஎஸ் இளங்கோவன் செல்கிறார். காலை 11 மணிக்கு சபாநாயகர் அப்பாவு இவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பலர் இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், இந்த வெற்றி முழுக்க முழுக்க முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம். 20 மாதம் சிறப்பாக ஆட்சி செய்து இருக்கிறார். இந்த 20 மாதத்தில் அவர் கொடுத்த வாக்குறுதிகளில் 80 சதவிகிதத்தை நிறைவேற்றி இருக்கிறார். அது மிகப்பெரிய விஷயம். மக்கள் இதை எல்லாம் பார்த்து இருக்கிறார்கள். அதற்கு கிடைத்த வெற்றிதான் இது.

ஸ்டாலின் ஆட்சி
இந்த வெற்றி என்பதை முதல்வருக்கு கிடைத்த வெற்றியாக, ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கிறேன். வாக்கு வித்தியாசம் அதிகம் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்தான். என்றைக்கு மதசார்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி இங்கே போட்டியிடும் என்று அறிவித்தாரோ அப்போதில் இருந்தே திமுக முத்துசாமி, அமைச்சர் கேஎன் நேரு போன்றவர்கள் களத்தில் இருந்தனர். அவர்கள் எல்லாம் தேர்தல் வேலைகளை தீவிரமாக கவனித்தனர். அது தற்போது தேர்தலிலும் பலன் அளித்து உள்ளது, என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மாற்றம்
இந்த நிலையில் காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் விரைவில் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது காங்கிரஸ் எம்எல்ஏ கு.செல்வப்பெருந்தகை சட்டசபை குழு தலைவராக இருக்கிறார். அவருக்கு பதிலாக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ்இளங்கோவன் அந்த பொறுப்பிற்கு வரலாம். இளங்கோவன் மூத்த உறுப்பினர் என்பதால் அவருக்கு இந்த பதவி வழங்கப்படலாம். ஆனால் சட்டசபையில் அவருக்கு நீண்ட அனுபவம் கிடையாது என்பதால் அவருக்கு இந்த வாய்ப்பை காங்கிரஸ் வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications