Exclusive: “விஜய் தனித்துதான் நிற்பார்.. அதுதான் பாஜகவின் அஜெண்டா”! பாயிண்டை பிடித்த பத்திரிகையாளர்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்துத்தான் நிற்கும் என்றும், பாஜகவின் செயல் திட்டப்படியே விஜய் செயல்படுகிறார் என்றும் பத்திரிகையாளர் சுபேர் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, பாஜகவால் தான் தோற்றோம் என்று கூறியவர்கள் இன்று பாஜக வேண்டும் என்று தவம் இருக்கக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதற்கு நாங்கள் கர்வப்படுகிறோம். பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கி இருக்கிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.

அண்ணாமலையின் இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலை, அதிமுகவைத்தான் குறிப்பிடுவதாக கருத்துகள் எழுந்தன. அது குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "பாஜக கூட்டணிக்காக தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல. நேரடியாக அதிமுக என்று சொன்னாரா? கூட்டணி குறித்து 6 மாதத்திற்குள் தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதிமுக, கூட்டணி குறித்து ஏங்கக்கூடிய நிலைக்கு வந்திருக்கிறது என பத்திரிகையாளர் சுபேர் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். பாஜகவின் கூட்டணி திட்டம் பற்றி நம்முடன் அலசி இருக்கிறார் பத்திரிகையாளர் சுபேர்.
பத்திரிகையாளர் சுபேர் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில், "பாஜக அதிமுக கட்சிகள் கூட்டணியை விட்டு விலகிப் போகவில்லை. மறைமுக கூட்டணி இருந்துகொண்டே தான் இருந்தது. அவர்களின் ஆதரவாக இருக்கும் கட்சிகளையே, வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதற்காக தனியே நிறுத்துவார்கள். உதாரணத்துக்கு பீகாரில் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானை தனியாக நிற்க வைத்து 4% வாக்குகளைப் பிரித்தார்கள். தேர்தலுக்குப் பிறகு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தனர்.
சிறுபான்மையினர், தலித் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை தனியாக நிறுத்தினார்கள். அந்த ஃபார்முலா அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. இப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியாக நின்றால் தான் இருக்கும் கொஞ்ச நஞ்சம் எம்.எல்.ஏக்களையும் காப்பாற்ற முடியும் என்ற முடிவில் இருக்கிறது அதிமுக.
எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக பல செக் வைத்துள்ளது. முரண்டு பிடித்தால் கட்சியைக் கைப்பற்றக் கூடிய அளவுக்கு ஆள் இருக்கிறது என மறைமுக மிரட்டல் விடுக்கிறது. பாஜக நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி என அதிமுக தலைவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே கூறினார்கள். ஆனால், அண்ணாமலை அதிமுக என்று சொன்னாரா எனக் கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி. தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி சரண்டர் ஆகிவிட்டதாக தெரிகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை பாஜக செட் செய்கிறது. விஜய் தனியாகத்தான் நிற்பார். 2026ல் விஜய்க்கு பாஜக கொடுத்துள்ள அஜெண்டா, அவர் தனியாக நிற்பதுதான். புதிய தலைமுறை வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்று சிதறடிப்பதுதான் விஜய்க்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை. 2026 தேர்தல் சமயத்தில், யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்ற கருத்துருவாக்கத்தை நிலைநிறுத்துவார்கள். கருத்துக் கணிப்புகள் அப்படித்தான் வரும்." எனத் தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் சுபேர்.












Click it and Unblock the Notifications