தரமற்ற ஓஆர்எஸ் பானங்களால் வயிற்றுப்போக்கு அதிகரிக்கும்! தமிழ்நாடு சுகாதாரத்துறையின் எச்சரிக்கை
சென்னை: கோடை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் சந்தைகளில் விற்கப்படும் ஒஆர்எஸ் எனப்படும் சர்க்கரை திரவ ஒப்பு கரைசல் பானங்கள் வயிற்றுப்போக்கையும் நீரிழப்பையும் அதிகப்படுத்தும் எனவும் பொதுமக்கள் தரமான ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
கோடை காலம் தொடங்கி இருக்கும் வரையில் வெயில் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இதை அடுத்து பொதுமக்கள் நீர் இழப்பை தடுப்பதற்காகவும் கூடுதல் சக்திக்காகவும் மெடிக்கல்களில் விற்கப்படும் ஒஆர்எஸ் கரைசலை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
தற்போது பல்வேறு பிளேவர்களில் அது விற்பனைக்கு உள்ளது. இந்த நிலையில் தரம் அற்ற ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை வாங்கி பயன்படுத்தினால் நீர் இழப்பு ஏற்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடலில் இருந்து நீர்ச்சத்து, அத்தியாவசிய உப்புகள் கணிசமாக வெளியேறிவிடும். அதற்கு முறையாக சிகிச்சை பெறாவிட்டால், கடுமையான நீரிழப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படலாம். உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ள உப்பு - சர்க்கரை கரைசலை (ஓஆர்எஸ்) பயன்படுத்துவதால், வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீரிழப்பை தவிர்க்க முடியும்.
ஒரு ஓஆர்எஸ் பொட்டலத்தின் 20.5 கிராம் மொத்த எடையில் 13.5 கிராம் குளுக்கோஸ், 2.9 கிராம் டிரைசோடியம் சிட்ரேட், 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு ஆகியவை உள்ளன. ஒரு லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, ஆறிய பிறகு, ஓஆர்எஸ் பொடியை அந்த நீரில் கரைத்து குடிக்க வேண்டும். ஆனால், 24 மணி நேரத்துக்குள் இதை பயன்படுத்த வேண்டும்.
இந்த நிலையில், திரவ உப்பு - சர்க்கரை கரைசல் என்று சந்தையில் வணிக ரீதியில் பல்வேறு பெயர்களில் ஓஆர்எஸ் விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக, நீர்ச்சத்து பானங்கள் என்று விளம்பரப்படுத்தப்படும் பானங்கள் ஆற்றல் மேம்படுத்தக்கூடிய திரவங்களாக மட்டுமே பயன்படுகிறது. இவற்றில், உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்திய அளவில் தாது உப்புகள், குளுக்கோஸ் ஆகியவை இல்லை. இந்த விதமான பானங்களை பருகுவதால் மருத்துவ ரீதியாக வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீரிழப்பை சரிசெய்ய முடியாது. மாறாக, இவை வயிற்றுப்போக்கை அதிகரிப்பதுடன், நீரிழப்பை அதிகரிக்கவும் செய்யும்.
உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த உப்பு - சர்க்கரை கரைசல் பொட்டலங்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகின்றன. தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. ஓஆர்எஸ் பயன்படுத்தும்போது, அதன் உட்பொருட்கள் உலக சுகாதார நிறுவன தரநிலைக்குள் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் தரமான ஓஆர்எஸ் பொட்டலங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு '104' மருத்துவ சேவையை தொடர்பு கொள்ளலாம். ஆரம்ப சுகாதார நிலையங்களில் கேட்டும் தெரிந்து கொள்ளலாம்' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications