பிரபல ஓட்டலில் அதென்ன போண்டாவில்? குழந்தையின் வாய்க்குள் பார்த்தீங்களா? அப்படியே திகைத்து போன சென்னை
சென்னை: உணவுத்துறை அதிகாரிகள் சென்னையின் பிரதான ஓட்டல்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், சுகாதாரமற்ற உணவு விற்பனை செய்த பிரபல ஓட்டல் ஒன்றுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். என்ன நடந்தது?
சமீபகாலமாகவே, ஓட்டல்களிலும், இறைச்சி கடைகளிலும் தரமற்ற இறைச்சியை விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன.. இதன்காரணமாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், புகார்கள் வந்த இடங்களுக்கு சென்று நேரடியாகவே ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓட்டல்கள்: அத்துடன், சம்பந்தப்பட்ட ஓட்டல்களிலும், நடைபாதை உணவகங்களிலும், இறைச்சி கூடங்களிலும், மீன் மார்க்கெட்டுகளிலும், விரைந்து சென்று ஆய்வு நடத்தி, அத்தகைய புகார்கள் நிரூபணமாகும் பட்சத்தில் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள்.
குறிப்பாக ஆட்டிறைச்சி விற்பனையில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.. இதற்கு காரணம், கெட்டுப்போகாமல் இருப்பதற்காக, ஆட்டிறைச்சியின் மீது நேரடியாக கெமிக்கலை பயன்படுத்தாமல், பதப்படுத்த பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகளின் மீது கெமிக்கலை செலுத்தி, அதனை ஆட்டிறைச்சியுடன் சேர்த்துவிடுகிறார்களாம். இதனால், நீண்ட நேரம் மட்டன் கெட்டுப்போகாமல் இருக்குமாம்.
கெமிக்கல்ஸ்: இந்த கெமிக்கல் கலந்த உணவை சாப்பிடும்போது, வயிற்று போக்கு, வாய்ப்புண், வாந்தி, வயிற்று எரிச்சல், ஒவ்வாமை, தலை சுற்றல் உள்ளிட்டவை ஏற்பட்டுவிடுகிறது.. அதற்காக, உண்ணும் இறைச்சியில் கெமிக்கல் கலக்கப்பட்டு உள்ளதா என்பதை கண்டறிவதும் கடினம் என்பதால், சமைக்கும் முன்பே இறைச்சியின் தன்மையை வைத்து கெமிக்கல் கலந்தது கண்டறியப்பட்டால், அவற்றை அகற்றிவிடலாம் என்கிறார்கள்.
எனவேதான், கடந்த 2 மாதங்களாகவே, ஓட்டல்களிலும் அதிக சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். கெட்டுப்போன உணவுகள் உணவகங்களில் வழங்கப்பட்டால், முதலில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, உரிய விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில், ஹோட்டலுக்கு சீல் வைத்து, அதன் உரிமம் ரத்துசெய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.
பிரியாணி: சில நாட்களுக்கு முன்பு, சென்னை கொடுங்கையூர் பகுதியில் இயங்கி வரும் எஸ்.எஸ்., ஹைதராபாத் பிரியாணி உணவகத்தில், பிரியாணி சாப்பிட்ட, 40 பேரின் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. அதே நாளில் பொன்னேரியில் உள்ள அதன் கிளை உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டவர்களின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. அதனால், எஸ்.எஸ்.பிரியாணி ஓட்டலுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடனடியாக சீல் வைத்தனர்.
இத்தனை நடவடிக்கைகள் எடுத்தும்கூட, சில ஓட்டல்களில் வழங்கப்படும் உணவுகளில் அலட்சியம் காட்டப்படுகிறது.. இப்போது சென்னையில் இன்னொரு ஓட்டலுக்கும், அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.
தனியார் ஓட்டல்: வில்லிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில், தனியார் ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. அதே பகுதியை சேர்ந்த விவேக் என்பவரின் உறவினர், அந்த ஓட்டலிலிருந்து, தன்னுடைய குழந்தைக்காக போண்டாவை வாங்கி சென்றுள்ளார்... குழந்தை போண்டாவை சாப்பிடும்போது, அதிலிருந்த பிளேடு துண்டு ஒன்று வாயில் சிக்கிக்கொண்டு விட்டது.
குழந்தையின் வாயில் பிளேடை பார்த்ததுமே அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்களுடன் ஓட்டலுக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் இச்சம்பவம் குறித்து, அந்த ஓட்டலின் உரிமையாளர்கள் சரியாக பதில் அளிக்கவில்லையாம். எனவே, உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பாதிக்கப்பட்டவர்கள் புகாரை கொண்டு சென்றனர். இதனடிப்படையில் விரைந்து வந்த சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டனர்..
மீண்டும் நோட்டீஸ்: அப்போது உணவுகளின் தரம் குறித்து அறிய மாதிரி உணவுகள் சேகரிப்பட்டு ஆய்வகங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன.. ஓட்டலை முழுமையாக நேரில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பிளேடு துண்டு தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு ஓட்டலுக்கு நோட்டீஸ் வழங்கியிருக்கிறார்கள். ஹோட்டல் தரப்பில் வழங்கப்படும் விளக்கத்தையடுத்தே, ஓட்டலுக்கு சீல் வைக்கப்படுமா? இல்லையா? என்பது தெரியவரும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications