பாறையையும் உருக வைத்த எஸ்.பி.பி.. "சர்வே ஜனாஸ்ஸு" மந்திரத்துடன் அச்சு அசல் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
பாறையில் எஸ்பிபியின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது
சென்னை: மறைந்த பிரபல பாடகர் எஸ்பிபியின் சிற்பம் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. பாறையில் செதுக்கப்பட்டுள்ள இந்த சிற்பம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.
பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் இறந்து இத்தனை நாட்கள் கடந்தும், இன்னும் அந்த இழப்பில் இருந்து பலரால் மீண்டு வெளியே வர முடியவில்லை.
எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையிலான உணர்வு வெளிப்பாட்டை கொண்டிருந்த நம் சம காலத்து கலைஞர் எஸ்பிபி ஆவார்.. திரைப்பட பாடகர் என்பதையும் தாண்டி, நல்ல மனிதர் என்ற பெயரை ஒட்டுமொத்த மக்களிடமும் பெற்றவர்.

நினைவு இல்லம்
அவரது பாடல்கள் ஒவ்வொன்றிலும் அவர் காட்டிய அர்ப்பணிப்பும், ஈடுபாடும் இன்றுவரை சாகாவரத்தைப் பெற்று தந்திருக்கின்றன.. அதனால்தான், எஸ்பிபி ரசிகர்களின் பொதுச் சொத்தாக நிரந்தரமாக தங்கி உள்ளார்.. அவர் இறந்த போது, அவரது உடல் காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரிலுள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது... அவரது பண்ணை வீட்டில்தான், அவரது மகன் எஸ்.பி.பி.சரண், ஒரு நினைவு இல்லத்தை அமைத்து வருகிறார்.

சிலைகள்
கடந்த ஒரு வருடமாகவே இந்த பணி நடந்து வரும் நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.. இங்கு அமைய போகும் அவரது சிலைகள், புதுவையை அடுத்த ஆரோவில் சஞ்சீவி நகர் பகுதியில் சிற்பக்கூடத்தில் உருவாகியுள்ளன... அந்த சிற்பங்கள்தான் இணையத்தை கலக்கி வருகின்றன.. இந்த சிற்பக்கூடத்தினர் இதை பற்றி சொல்லும்போது, "தாமரைப்பாக்கத்தில் எஸ்பி பாலசுப்பிரமணியம் நினைவு இல்லத்தில் ஓராண்டாக பணி நடந்து வருகிறது.

வடிவமைப்பு
அங்கு ஏராளமான சிலைகள் வடிவமைத்துள்ளோம்... பாறையை குடைந்து எஸ்பி பாலசுப்பிரமணியம் முகத்தை வடிவமைக்க திட்டமிட்டோம்.. அதற்காக 6 டன் எடை கொண்ட பாறை திருவக்கரையில் பெறப்பட்டது.. கடந்த 6 மாதங்களாக இந்த பணி நடந்து வருகிறது... எஸ்பிபியின் அழகிய உருவம் அந்த பாறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உருவத்தின் அருகில் அவரது கையெழுத்து, அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரம் ஆகியவற்றையும் சேர்த்து வடிவமைத்துள்ளோம்.

மந்திரம்
சிற்பி கருணாகரன் குமார் இதற்கான வடிவமைப்பை செய்து வருகிறார்.. அவர் தலைமையில் மேலும் 6 சிற்பிகள் இதை வடிவமைத்தோம்... எஸ்பி பாலசுப்பிரமணியம் முகத்தின் கீழே அவர் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையான "சர்வே ஜனாஸ்ஸு, ஜனா பவந்து, ஸர்வேசு ஜனா சுகினோ பவன்" என்ற மந்திரத்தையும் பொருத்தியுள்ளோம்.. இந்த பணிகள் முடிவடைந்து பாறை தாமரைப்பாக்கம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு இதை பொருத்தும் பணிகள் நடக்க உள்ளது" என்றனர்.

இதயம்
பாறைக்குள் எஸ்பிபிக்குள் உருவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.. கன்னத்தில் விரலை வைத்து அச்சுஅசல் எஸ்பிபி இயல்பாக சிரிப்பது போலவே காணப்படுகிறது.. தன் ரசிகர்களின் இதயத்தில் நிரந்தரமாக குடிகொண்டுவிட்ட எந்த கலைஞர்களுக்கும் மரணமேயில்லை.. அப்படித்தான் எஸ்பிபியும்.. மரணத்தைத் தாண்டிய வாழ்வு கலைஞர்களுக்கு வாய்த்துவிடுவது இப்படித்தான் போலும்..!












Click it and Unblock the Notifications