மிட்நைட் சாட்டிங்கை வைத்து சீட்டிங்..அப்பா மகன் செய்ற வேலையா இது? செல்போன் வக்கிரம்.. அதிர்ந்த சென்னை
சென்னை: இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஆபாச படங்களை தன்னிடம் பெற்று தந்தையும் மகனும் பணம் கேட்டு மிரட்டியதாக இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இளைஞர் மற்றும் அவரது தந்தையை கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட நிலையில் செல்போன் தான் எல்லாமே என்று ஆகிவிட்டது. பெரும்பாலான இளம் பெண்கள் எப்போதும் செல்போன்களிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர்.

குறிப்பாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத நபர்களிடம் சிக்கி பணத்தையும் வாழ்க்கையையும் தொலைக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் சென்னையில் அரங்கேறி இருக்கிறது.
மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அவ்வப்போது வந்து செல்வது உண்டு. அப்படி கடந்த சில மாதகளுக்கு முன்பு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது அருகில் வசிக்கும் சுஜித் என்பவர் அறிமுகம் ஆகி இருக்கிறார். தொடர்ந்து இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி வந்திருக்கின்றனர். சில நாட்களில் இளம்பெண்ணை சுஜித் காதலிப்பதாக கூறி பேசியிருக்கிறார்.
தொடர்ந்து இரவு நேரங்களில் இருவரும் இன்ஸ்டாகிராமில் வீடியோ காலிங் என தொடர்ந்து பேசி வந்திருக்கின்றனர்.. இதற்கிடையே அந்த இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை சுஜித் அனுப்ப சொல்லி இருக்கிறார். இதனால் அவரிடம் பேசாமல் இருந்தபோது தங்களது சாட்டிங் ஸ்க்ரீன் ஷாட்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து அந்த பெண் தனது அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் தனக்கு நிறைய பணம் வேண்டும் இல்லை என்றால் இந்த படங்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி இருக்கிறார் சுஜித். இதனால் பயந்து போன அந்த இளம் பெண் சுஜித் கேட்கும் போதெல்லாம் பணம் 5 ஆயிரம், 10 ஆயிரம் என பணம் அனுப்பி வந்திருக்கிறார். இதற்கிடையே கடந்து சில நாட்களுக்கு முன்பு அந்த இளம் பெண்ணை தொடர்பு கொண்ட சுஜித்தும், அவரது தந்தையான வின்சென்ட்டும் உடனடியாக ஐம்பதாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என மிரட்டி இருக்கின்றனர்.
தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என அந்த பெண் கூறியதால் ஆத்திரமடைந்த சுஜித், அவருடைய அந்தரங்க படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். இதனால் அதிர்ந்து போன அந்த பெண் சுஜித் மீதும் அவரது அப்பா வின்சென்ட் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இளம் பெண் கொடுத்த தகவலின் படி சுஜித் மற்றும் அவரது தந்தையான வின்சென்டை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் இதே போல பலரிடம் பணம் பறித்து வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications